ஏசி வாசிகள் கவனத்திற்கு..

images

வெயில் காலங்களில் , புழுக்கம் தாங்க முடியாமல் , ஏசி அறைகளில் தஞ்சம் புகுபவர்கள் ஏராளம்! அது என்ன ஏசி??  ஏசி என்ற ஆங்கில சொல்லை , அழகு தமிழில் , காற்றுச்சீரமைப்பி என்று சொல்ல வேண்டும்! ஆம் , நம் அறையில் உள்ள காற்றை , நாம் விரும்பும் வண்ணம் சீரமைத்து தருவதே இந்த ஏசியின் தலையாய வேலை! இந்த ஏசி என்பது யாது? அது  என்ன மாயம் , என்ன மந்திரம் செய்து , நமக்கு ஊட்டியில் இருப்பது போன்ற குளு குளு உணர்வை தருகிறது என்று ஐயம் தோன்றினால் மேற்கொண்டு படியுங்கள்.. உங்களுக்கு தான் இந்த பதிவு!

நிறைய வகையான ஏசிகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன..
அவை ,
1​) ஜன்னல் ஏசி(Window Ac)

ac2
2) பிளவு ஏசி(Split Ac)

ac3
3) கோபுர ஏசி(Tower Ac)

ac5
4) கேசட் ஏசி(Cassette Ac)

ac4
5) கன சதுர ஏசி(Cube Ac)

ac6

இடத்திற்கு , இடத்தின் வசதிக்கு தகுந்தாற் போல் , ஏசியின் எந்த  வகை என்று தீர்மானம் செய்யப்பட்டு ,நிறுவப்படுகிறது! என்ன தான் வகை வகையாக ஏசிகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டாலும் , அவற்றின் உள்ளே , ஒரே மாதிரியான வேலை தான் நடக்கிறது! அப்படி என்ன தான் வேலை அதனுள்ளே நடக்கிறது என்பதனை தெரிந்து கொள்ளும் முன்னே , ஏசியின் உள்ளிருக்கும் பாகங்களை , அக்கு வேர் , ஆணி வேறாக பிரித்து பார்த்து விடுவோம்..

ஏசியின் உள்ளிருக்கும் முக்கியமான பாகங்கள் நான்கு, அவை..
1) அமுக்கி(Compressor)
2) திரவமாக்கி(Condenser)
3) விரிவாக்கக் கட்டுப்பாட்டிதழ்(Expansion Valve)
4) ஆவியாக்கி(Evaporator)

ac1

இனி , ஏசியின் உள்ளே , அப்படி என்ன தான் நடக்கிறது என்று ஒரு எட்டு எட்டி பார்த்து விடுவோம்! ஏசியின் உள்ளே ஒரு அமுக்கி(Compressor) இருக்கிறது என்று பார்த்தோம் அல்லவா.. அந்த அமுக்கி , Freon போன்ற குளிர்பதன வாயுவை(Refrigerant) அமுக்குகிறது.. அவ்வாறு அமுக்கப்படும் போது , அந்த குளிர்ப்பதன வாயுவின் அழுத்தம்(Pressure) அதிகரித்து , மிக சூடாகி விடுகிறது! அவ்வாறு சூடான , குளிர்ப்பதன வாயு , பின்னர் , திரவமாக்கியின்(Condenser) உள்ளே செலுத்தப்படுகிறது .. அங்கே , ஒரு காற்றாடியின்(Fan) துணையோடு ,  சூடு  வெளியே விரட்டப்பட்டு , திரவ நிலைக்கு மாற்றம் பெறுகிறது . அவ்வாறு திரவ நிலைக்கு மாற்றப்பட்ட , குளிர்பதன வாயு , பின்னர் விரிவாக்க கட்டுப்பாட்டிதழுக்கு(Expansion Valve)  செலுத்தப்படுகிறது.. அந்த விரிவாக்க கட்டுப்பாட்டிதழோடு ஒரு வெப்பநிலை உணர்வி(Temperature Sensor) இணைக்கப்பட்டிருக்கும்! வெப்பக்  கட்டுப்பாடு  சாதனங்களின் அமைப்புகளை பொறுத்தே  , இந்த விரிவாக்க கட்டுப்பாட்டிதழ்  வேலை புரியும்.  அதாவது , நாம் ரிமோட்டை கொண்டு , 16 டிகிரி , 24 டிகிரி என்று நமக்கு தேவையான வெப்ப நிலையை அமைக்கிறோம் அல்லவா அது தான்!ஆக, அதற்கு தக்கவாறு , எவ்வளவு தேவையோ , அவ்வளவு  , திரவ நிலையில் இருக்கும் குளிர்பதன வாயுவை வெளியிடுகிறது , இந்த விரிவாக்க கட்டுப்பாட்டிதழ்!

அவ்வாறு விரிவாக்க கட்டுப்பாடிதழ் மூலமாக , திரவ  நிலையில் இருக்கும் குளிர்பதன வாயுவை , ஆவியாக்கியின்(Evaporator) உள்ளே செலுத்தும் போது , அவை திரவ நிலையில் இருந்து ஆவி நிலையை அடைந்து விடுகிறது. அவ்வாறு , விரிவடைதல் மூலமாக , திரவ நிலையில் இருக்கும் ,  குளிர் பதன வாயு , ஆவியாகும் போது , ஒரு குளிர்ச்சி உண்டாகிறது! ஏனெனில் , அவ்வாறு திரவ நிலையில் இருந்து ஆவி நிலை அடைவதற்கு தேவையான வெப்ப சக்தியை , தன் சுற்றுவட்டாரங்களில் இருந்து எடுத்து கொள்கிறது!இங்கே , சுற்றுபுறம் என்று குறிப்பிடப்படுவது , நம் அறை! நம் அறையில் இருக்கும் காற்றின் வெப்பத்தை எடுத்து கொண்டு ஆவியாகி விடுகின்றது,திரவ நிலையில் இருக்கும் குளிர் பதன வாயு! உதாரணத்துக்கு , நாம் நமது உள்ளங்கையில் , ஒரு துளி பெட்ரோலை , வைத்தால் , அத்துளி , நம் உள்ளங்கையின் வெப்பத்தை எடுத்து கொண்டு ஆவியாகி விடும்! அத்தருணத்தில் , ஒரு குளிர்ச்சியை , நம் உள்ளங்கையில் உணர முடியும்! அதை போலவே தான் இதுவும்! இந்த குளிர்ச்சி தான் , நம் அறையில் இருக்கும் காற்றுக்கு , காற்றாடி மூலமாக கொடுக்கப்படுகிறது! பின் , ஆவி நிலையில் இருக்கும் குளிர் பதன வாயு , மீண்டும் அமுக்கியின் உள்ளே செலுத்தப்படுகிறது. இது ஒரு சுழல் செயல்முறை(Cyclic Process) போல , திரும்ப , திரும்ப நடை பெற்று கொண்டே இருக்கும்! எப்பொழுது அமுக்கி வேலை செய்ய விடாமல் , நிறுத்தப்படுதோ, அப்பொழுது , இந்த செயல்முறை ஒரு முடிவுக்கு வரும் !

ஏசி என்று அழைக்கப்படும் காற்று பதனாக்கி , அறையில் இருக்கும் காற்றின் வெப்பத்தை வெளியேற்றி , அதே காற்றை தான் குளிர்விக்கின்றது! அறையின் உள்  இருக்கும் காற்றை எல்லாம் வெளியேற்றுவதில்லை!அதனால், அந்த அறையினுள்ளே , மெழுகுவர்த்தி போன்றவற்றை ஏற்றுவது என்பதெல்லாம் , கூடவே கூடாது! ஏனெனில் ,கதவு , ஜன்னல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்  ஏசி அறைகளில் ,  பிராணவாயு(Oxygen ) கம்மியாக இருக்கும்… ஆக, எரியும் மெழுகுவர்த்தியால் , முழுமையாக எரிய முடியாமல் ,கார்பன் மோனாக்சைட் என்ற நச்சு வாயு உருவாகி , அறையினுள் இருக்கும் ஆளை சில நிமிடங்களில் கொன்று விடும்! இந்த கார்பன் மோனாக்சைட் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்!

candle

ஏற்கனவே , நாம் , ஏசியின் வகைகளையும் , ஏசியின் உள்ளிருக்கும் , நான்கு முக்கியமான பாகங்களை பார்த்தோம்! ஜன்னலில் மாட்டப்படும் ஏசியில் , ஒரே பெட்டியில் , எல்லா பாகங்களும் இருக்கும் வண்ணம் வடிவமைத்து இருப்பார்! ஆனால் , பிளவு ஏசியை , எடுத்து கொண்டால் , ஆவியாக்கி(Evaporator) அறையின் உள்ளேயும் , திரவமாக்கி(Condenser) , அறையின் வெளியேவும் இருக்கும் வண்ணம் வடிவமைத்திருப்பர்! இந்த இரண்டையும் குழாய்கள்(Pipes) மூலம் இணைத்திருப்பர்! இந்த குழாய்கள் வழியாக தான் , குளிர்பதன வாயு(Refrigerent) ,உள்ளேயும் , வெளியேயும் சுற்று சுற்றி வரும்!

DC-Comopressor-Fridge-DC-220-

நம் வீட்டு பிரிஜ்(Fridge) , அதாங்க குளிர்பதனப்பெட்டியை எடுத்து கொள்ளுங்கள் , அதுவும் ஏசியின் அதே செயல்முறையை கொண்டது தான்! உடனே , ஆஹா என்று , இரவு படுக்கும் போது , அதை திறந்து விட்டு , அதன் முன்னே படுத்து கொள்ளலாம் என்றெல்லாம் ஆசை படாதீர்கள்! அப்படி பிரிஜ் மூலமாக , குளிர் காற்று வாங்க நினைத்தால் , என்னவாகும் தெரியுமா?? அறையின் காற்று , குளிருவதற்கு பதிலாக ,அறை காற்றின் வெப்பம் அதிகரித்து விடும்! ஏனெனில் , அவ்வாறு பிரிஜ் கதவை , திறந்து வைக்கும் போது , பிரிஜ் இன் பின் பக்கம் வழியாக , வெளியேறும் வெப்ப காற்று , முன் பக்கம் வெளியாகும் குளிர்ந்த காற்றை சமன் செய்து விடும்! மேலும் பிரிஜ் இன் அமுக்கி(Compressor) , ஒரு சின்ன இடத்தை , குளிர்விப்பதற்கு ஏற்றவாறு மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கும்! ஒரு பெரிய அறையை குளிர்விக்க அல்ல! மீறினால் , அறையின் வெப்பம் குறைவதற்கு பதிலாய் வெப்பம் அதிகரித்து காணப்படும்!

ஏசியை உபயோகம் செய்பவர்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில,
1) ஏசி ஒரு ஈரப்பதமகற்றி(Dehumidifier)! ஆதலால் , ஏசி அறையில் அமர்ந்து வேலை செய்பவர்கள் ,ஏசி அறையினுள் உறங்குபவர்கள் , அவ்வபொழுது தண்ணீர் அருந்த வேண்டும்! இல்லை என்றால் , உடம்பினுள் இருக்கும் , தண்ணீரை வற்றி போக செய்து விடும் இந்த ஏசி! பின் கட்டி சளியினால் அவதி , கழுதை , குதிரை என்று அனைத்தும் வண்டி கட்டி கொண்டு ஓடி வந்து , நம் உயிரை வாங்கும்!சளி பற்றி அறிய இங்கே சொடுக்கவும்!

how-a-dehumidifier-works-art

மேலே உள்ள படத்தில் , நம் அறையின் ஈரம் எவ்வாறு உறிஞ்சப்பட்டு , தண்ணீராய் வடிகிறது பாருங்கள்!
2) என்னதான் , ஏசி அறையினுள் உறங்குவது , வேலை செய்வது எல்லாம் சுகமாக இருந்தாலும் , அவ்வப்பொழுது ஏசியின் காற்று வடிகட்டியை(Air Filter),இரண்டு வாரங்களுக்கு , ஒரு முறையாவது , தண்ணீரை கொண்டு , சுத்தம் செய்வது சாலச் சிறந்தது! இதனால் , ஆஸ்துமா போன்ற வியாதிகள் வராமல் தடுத்து கொள்ளலாம்! மேலும் , தூசி அடைப்புகளை , கண்டு கொள்ளாமல் , விட்டு விடுவீர்களாயின் , அறையை குளிரூட்ட , அமுக்கி அதிகமாய் வேலை செய்து , மின்சார பில்லை எகிற வைத்து , நம் இதயத்தை பதம் பார்த்து விடும் ஜாக்கிரதை!

images (1) images (2)
3)​ஏசியின் உள்ளே இருக்கும் குளிர்பதன வாயு , நான்கு வருடங்கள் தொடர்ந்து உழைத்த பின்னே , படிப்படியாக தீர்ந்து விடும்! அதன் பின்னே , புதிதாக குளிர்பதன வாயுவை நிரப்ப வேண்டியது அவசியம்!

4) ஏசி அறைகளில் , எதையும் எரிக்க கூடாது! ஏனெனில் , ஒரு பொருள் ஏசி அறைகளில் , எரியும் போது , அது அந்த அறையில் இருக்கும் ஆக்சிஜனை விரைவில் காலி செய்து விடும்! நாலைந்து மனிதர்கள் , ஒரு பூட்டிய ஏசி அறையில் உறங்கும் போது கூட , அவ்வளவு விரைவாக , ஆக்சிஜன் காலி ஆவதில்லை! ஆனால் , நெடு நேரம் , நாலைந்து மனிதர்கள் , ஒரு பூட்டிய, சிறிய  ஏசி அறையில் ,  இருக்கும் போது , கண்டிப்பாக , அவர்களின் உடல் நலம் கெடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை!

5) ஏசியை போட்டு விட்டு காருக்குள் தூங்குபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! அவ்வப்பொழுது , ஏசியின் ஆவியாக்கியையும் ,கார் இன்ஜினின் , வெளிப்படுத்துகுழாயையும்(Exhaust pipe) , எந்த கசிவும்(Leakage) இல்லாமல் இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும்! இல்லையேல் , முன்னே சொன்னது போல , ஏசியின் ஆவியாக்கி வழியாக , கார்பன் மோனாக்சைட் வெளிவந்து , சத்தம் இல்லாமல் , தூங்கும் ஆளை காலி செய்து விடும்!

co1

co

co3

இப்பொழுது எல்லாம் இன்வெர்டர் ஏசி மிக பிரபலம்! ஏசியின் உள்ளே இருக்கும் முக்கியமான பாகமான , அமுக்கியின் வேகத்தை, இந்த இன்வெர்டெர் கட்டுப்படுத்தும்!இன்வெர்டெர் என்றால் என்ன என்று அறியஇங்கே சொடுக்கவும்!

inv

இந்த வகை இன்வெர்டெர் ஏசி , பழைய வகை ஏசியை காட்டிலும் , மிக குறைந்த அளவே , மின்சாரத்தை உட்கொள்கிறது! இதன் உள்  இருக்கும், சிறப்பு பாகங்களால் ,  இதன் விலை என்னவோ அதிகம் தான் , ஆனால் , படிப்படியாக குறையும் , மின்சார பில் மூலமாக , சரி கட்டி விடலாம்!

கொசுறு தகவல்: வெப்ப நாடுகளில் , ஏசியை உபயோகம் செய்வது போல , குளிர் பிரதேசங்களில் , ஹீட்டர்  (Room Heater) உபயோகிப்பர்! இந்த ஹீட்டர் என்றால் என்ன என்று தனி பதிவு எல்லாம் போட வேண்டும் என்று அவசியம் இல்லை! ரொம்ப சுலபமாக இந்த ஹீட்டரை பற்றி சொல்ல வேண்டும் ஆனால் , ஏசியின் உல்டா தான் ஹீட்டர் !

images (3)

ஆம் , ஏசியின் செயல்முறையை , அப்படியே தலை கீழாக வேலை செய்ய வைத்தால் அது தாங்க அறையை சூடு படுத்தும் ஹீட்டர்!

நன்றி! வணக்கம்!

This entry was posted in - இயற்பியல், அறிவியல் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

24 Responses to ஏசி வாசிகள் கவனத்திற்கு..

  1. Sri Saravana சொல்கிறார்:

    நல்ல கட்டுரை அக்கா

    Liked by 1 person

  2. rajalakshmi paramasivam சொல்கிறார்:

    ஏசி நம்மை ஜில்லென்றாக்கும் என்று தெரியும்.
    அதற்காகப் பாவம் அது எவ்வளவு வேலை செய்கிறது என்பதைப் படிக்கும் போது ஆச்சர்யப்பட வைக்கிறது. ஏசியைப் பற்றி இவ்வளவு விரிவாக விளக்கியமைக்கு நன்றி மகா.

    Liked by 1 person

    • mahalakshmivijayan சொல்கிறார்:

      வாங்க ராஜி மேடம்! இந்த பதிவை எழுதும் போது , உங்களை நினைத்து கொண்டே தான் எழுதினேன்! உங்களை கண்டிப்பாக இந்த பதிவை படிக்க அழைக்க செய்தி அனுப்ப நினைத்திருந்தேன்! ஆனால் , அதற்கு முன்பே வந்து என்னை மகிழ்ச்சி கடலில் திளைக்க செய்து விட்டீர்கள்! உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ராஜி மேடம் 🙂

      Like

  3. ramanans சொல்கிறார்:

    மிகவும் அருமையான கட்டுரை.

    Liked by 1 person

    • mahalakshmivijayan சொல்கிறார்:

      உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்! உங்கள் ‘நம்ப முடியாத அதிசயங்கள் மின்னூலை பதிவிறக்கம் செய்திருக்கிறேன்.. படித்து விட்டு என் கருத்துக்களை கண்டிப்பாக உங்களிடத்தில் பகிர்கிறேன்!நன்றி !

      Like

      • ramanans சொல்கிறார்:

        நன்றி சகோதரி, காத்திருக்கிறேன்.
        உங்கள் கட்டுரை எளிமையாக, மிகத் தெளிவாக, அனைவருக்கும், குறிப்பாக பள்ளி மாணவர்கள் கூடப் படித்தால் புரிந்து கொள்ளுமளவிற்கு புரியும் வகையில் இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடருங்கள்…

        Liked by 1 person

  4. பிரபுவின் சொல்கிறார்:

    நன்றி அக்கா.அருமையான ஒரு விடயத்தை பற்றி எழுதியமைக்காக. தெரியாத விடயங்கள் பலவற்றை உள்ளடக்கிய உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக இருக்கின்றது.நானும் பல நாட்கள் இது எவ்வாறு வேலை செய்கின்றது என்று யோசித்திருக்கின்றேன்.இன்று விடை கிடைத்திருக்கின்றது.எவ்வளவு மெனக்கெட்டு(சிரமப்பட்டு) எழுதியிருப்பீர்கள் என்று தெரிகின்றது.நன்றி அக்கா.
    எனது நண்பர்களுடன் இதை பகிர்ந்து கொண்டேன்.

    Liked by 1 person

    • mahalakshmivijayan சொல்கிறார்:

      வா பிரபு! உன்னை போல நானும் இந்த பதிவை எழுத ஆரம்பித்தவுடன் தான் , நிறைய ஆராய்ந்து அறிந்து கொண்டேன்.. இவ்வுலகில் எல்லாம் அறிந்தவர் என்று ஒருவரும் இலர்! சிறிது முயற்சி எடுத்தால் தெரியாத பலவற்றை சீக்கிரமே தெரிந்து கொள்ளலாம்!உன் வருகைக்கும் , கருத்துரைக்கும் இந்த பதிவை மீள்பதிவு செய்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙂

      Like

  5. பிரபுவின் சொல்கிறார்:

    Reblogged this on பிரபுவின் and commented:
    மிகச்சிறப்பான இந்தப் பதிவு வியத்தகு விடயங்கள் பலவற்றை இலகுவாக விளங்க வைக்கின்றது.நன்றி திருமதி. மஹா.வி அக்கா.

    Liked by 1 person

  6. krishnamoorthys சொல்கிறார்:

    இதுதான் வலைத்தலத்தின் பெருமை .தெரிந்தவர்கள் மற்றவர்களுக்காக மெனெக்கெட்டு பதிவு செய்வது .
    நன்றி சகோதரி .

    Liked by 1 person

  7. Pandian சொல்கிறார்:

    போன வாரமே வாசித்துவிட்டேன். விரிவாக பதில் போடத்தால் நேரம் காலம் ஒத்துவரவில்லை. தொடருங்கள். பேஷ் பேஷ்

    Liked by 1 person

  8. Vishwanath சொல்கிறார்:

    Quite educative!i am enlightened by reading all your arcticles in this blog!thanks-vishwanathan

    Liked by 1 person

  9. வணக்கம்…

    வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது… விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது…
    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக…
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    Liked by 1 person

    • mahalakshmivijayan சொல்கிறார்:

      வலைப் பதிவர்கள் சந்திப்பு நல்ல முறையில் சிறப்பாக நடக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்! இந்த தடவை வர முடியா விட்டாலும் , ஏதேனும் ஒரு வருடம் , இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கும் சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன்! என்னை விழாவிற்கு மறக்காமல் அழைத்தமைக்கு மிக்க நன்றி தனபாலன் சார் 🙂

      Like

  10. BALAJIKANNAN சொல்கிறார்:

    முதல் வருகை. ஏசி யின் சுகத்தை அனுபவிக்கிற நாங்கள் எலக்ட்ரிக் பில்லை குறைக்கமுடியாமல் தவித்தோம், வழி கிடைத்தது சகோதரி. (என்னதான் , ஏசி அறையினுள் உறங்குவது , வேலை செய்வது எல்லாம் சுகமாக இருந்தாலும் , அவ்வப்பொழுது ஏசியின் காற்று வடிகட்டியை(Air Filter),இரண்டு வாரங்களுக்கு , ஒரு முறையாவது , தண்ணீரை கொண்டு , சுத்தம் செய்வது சாலச் சிறந்தது! இதனால் , ஆஸ்துமா போன்ற வியாதிகள் வராமல் தடுத்து கொள்ளலாம்! மேலும் , தூசி அடைப்புகளை , கண்டு கொள்ளாமல் , விட்டு விடுவீர்களாயின் , அறையை குளிரூட்ட , அமுக்கி அதிகமாய் வேலை செய்து , மின்சார பில்லை எகிற வைத்து , நம் இதயத்தை பதம் பார்த்து விடும் ஜாக்கிரதை!) ந்ன்றி

    Liked by 1 person

    • mahalakshmivijayan சொல்கிறார்:

      வணக்கம் பாலாஜிகண்ணன் சார் ! உங்கள் எலெக்ட்ரிக் பில் குறைவதற்கு என் எழுத்தின் மூலமாக வழி கிடைத்ததை எண்ணி எனக்கும் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.. வருகைக்கும், கருத்துரைக்கும் மிகவும் நன்றி 🙂

      Like

பின்னூட்டமொன்றை இடுக