சளி என்றால் என்ன?

mucus7

சளி என்றாலே எல்லோருக்கும் ஒரு அருவருக்கத்தக்க  விஷயம் ! அந்த வளவளப்பான விஷயத்தை வெறுக்காதவர்கள் பூமியில் உண்டா என்ன? ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள்! இது இயந்திரத்தின் பாகங்களில் போடப்படும் எண்ணெயை போன்றது! சளி என்ற ஒன்று நம் உடம்பில் இல்லை என்றால் , நம் உடம்பில் உள்ள பாகங்கள் எல்லாம் பழுதடைந்து தன் வேலையை நிறுத்திவிடும்!வியப்பாக இருக்கிறது அல்லவா! மேலும், சளி பற்றிய பல தெரியாத தகவல்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்…

 

சளி நம் உடம்புக்கு மிக அவசியமான ஒன்று! சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள் , நம் வாய் , மூக்கு , தொண்டை , நுரையீரல் , இரைப்பை குடல் ஆகிய எல்லாவற்றிலும் ஒரு உட்பூச்சு கொடுத்தாற் போல் அமைந்து அவை அனைத்தையும்   பாதுகாப்பு கவசம் போல பாதுகாக்கின்றன. தூசி , பாக்டீரியா , வைரஸ்  போன்றவை , நாம் சுவாசிக்கும் காற்றோடு சேர்ந்து நம் நுரையீரலின் உள்ளே  சென்று விடாமல் தடுக்கும் ஒரு வடிகட்டி போலவும் செயல் படுகிறது. சளியின் பிசுபிசுப்பு தன்மை அதற்கு இவ் விஷயத்தில் கை கொடுத்து உதவுகிறது. மேலும் சளியில், பாக்டீரியா வைரஸ்களை , நம் உடம்பு கண்டு கொள்வதற்காக , பிறபொருளெதிரிகளும் (Antibodies), இவ்வாறு எல்லை மீறி நுழைபவர்களை கொன்று குவிப்பதற்காக  நொதிகளும்(enzymes ), பிசுபிசுப்பு தன்மையை ஏற்படுத்துவதற்காக புரதங்களும்(Protein ) , பல்வேறு உயிரணுக்களும்(Cells ) நிறைந்து இருக்கின்றன..

நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுதும் , உங்கள் உடம்பு சளியை உற்பத்தி செய்து கொண்டே தான் இருக்கும். ஒரு நாளைக்கு , ஒன்றில் இருந்து ஒன்றரை லிட்டர் சளியை நம் உடம்பானது உற்பத்தி செய்கிறது!

ஒரு உதாரணத்துக்கு ,தூசியோ , நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் ஏதோ ஒரு பொருள் , நம் மூக்கினுள் நுழைந்து விடும் போது , சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி விடுகின்றது.. அதாவது ,இந்த மாதிரி தருணங்களில் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்கள்(Mast cells ), ஹிஸ்டமைன்(Histamine ) என்ற வேதி பொருளை, வெளிப்படுத்துகின்றன. இந்த ஹிஸ்டமைன் ஆனது , உடனே தும்மல் , அரிப்பு ,  மூக்கில் ஏதோ திணித்து வைத்தாற் போன்றதொரு உணர்வு , போன்றவற்றை தூண்டி விடுகிறது. இவ்வாறு தூண்டப்பட்டவுடன் , சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், சளியை தண்ணீரை போன்று கசிய விட , நம் மூக்கு திறந்து விட்ட குழாயை போல ஓட ஆரம்பிக்கின்றது !

ige     mucus1

சிலருக்கு சுவைப்புலன் நாசியழற்சி(gustatory rhinitis ) பிரச்சனை இருப்பதாலும் மூக்கு திடீரென்று ஓட ஆரம்பிக்கும்.. அதாவது , மிகுந்த காரமான உணவை எடுத்து கொள்ளும் போது இந்த பிரச்சனை உண்டாகும். மற்றும் சிலருக்கு , பால் பொருட்களை(Cow’s  Milk Protein Allergy(CMPA)) எடுத்து கொள்ளும் போது ,அவர்கள் உடம்பில் சளியின் உற்பத்தி அதிகமாகும்.

download                      cmpa

2153.3

 

பெரும்பாலும் இந்த சளியானது, தெள்ளத்தெளிவாக எந்த நிறமும் இன்றி காணப்படும். ஆனால், உங்களுக்கு சளி (Cold)பிடித்திருக்கும் போது , உங்கள் மூக்கின் வழியே வெளியிடப்படும் சளியின் நிறம், மஞ்சள் அல்லது பச்சை வண்ணத்தில் காணப்படும். உடனே , பாக்டீரியா உடம்பின் உள்ளே நுழைந்து , நோய் தோற்று ஏற்பட்டு விட்டது என்று எந்த அர்த்தமும் இல்லை. உங்களுக்கு சளி பிடித்திருக்கும் போது , உங்கள் உடம்பின் நோய் எதிர்ப்பு அமைப்பு , நியூட்ரோபில்ஸ்(Neutrophils) என்னும் வெள்ளை இரத்த அணுக்களின் படையை அனுப்பும். இந்த வெள்ளை இரத்த அணுக்களில் ஒரு பச்சை நிற நொதி(Enzyme) உண்டு.. இந்த பச்சை நிறத்து நோதியே, உங்களை பிடித்து தொந்தரவு செய்யும் சளியின் பச்சை நிறத்தின் பின்னணியில் இருப்பது! சில சமயம் , சளி தெள்ள தெளிவாக , எந்த நிறமும் இன்றி காணப்படும்.. ஆனால் , உங்களுக்கு , காது நோய்த்தாக்கம்(Ear Infection ) மற்றும் சைனஸ் நோய் இருக்க கூடும்! ஆக, சளியின் நிறத்தை வைத்து கொண்டு எந்த கணிப்பும் செய்து விட முடியாது! அப்படியே , நோய் தொற்று ஏற்பட்டு இருந்தால் , சளியின் தொந்தரவோடு , மூக்கடைப்பு , காய்ச்சல் போன்ற பிற தொந்தரவுகளும் ஏற்பட்டு நோய் தொற்றை வெளிச்சம் போட்டு காட்டி கொடுத்து விடும்!

mucus2

சில சமயங்களில் சளியோடு சேர்ந்து , சிகப்பு அல்லது பிரவுன் நிறத்தில் இரத்தம் காணப்படும்! இரத்தம் சிறிதளவில் காணப்பட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லை.. நீங்கள் அதிகமாக மூக்கை சீறுவதால்,இல்லை கைகளால் மூக்கை தேய்த்து கொள்வதால் , மூக்கில் உள்ள இரத்த குழாய்கள் சேதமுற்று , சிறிது இரத்தம் வந்திருக்கலாம்.. அதிக அளவு உதிர போக்கு இருந்தால் , மருத்துவரை அவசியம் பார்த்து விடுவது நல்லது!

நோய் தொற்று ஏற்படும் பொழுது என்ன ஆகின்றது? சைனஸ் பிரச்சனையும் , அதிக சளியால் அவதியும் ஏற்படுகிறது! சைனஸ் என்பது , நம் முகத்தில் அமைந்த, காற்று நிறைந்த  வெற்று  துவாரங்கள்.. இந்த துவாரங்களின் உட்புற சுவர்களில் சீத சவ்வுகள்(Mucous membranes ) நிறைந்திருக்கும். இந்த சீத சவ்வுகள் தான் சளியை உற்பத்தி செய்கின்றன! இந்த சீத சவ்வுகளில் , எரிச்சலோ , நோய் தொற்றோ உண்டாகும் போது , அதிகப்படியான சளியை உற்பத்தி செய்ய ஆரம்பித்து விடுகிறது. அவ்வாறு உற்பத்தி ஆகும் அதிகப்படியான சளி , அந்த வெற்று  துவாரங்களை , கட்டி  சளியால் நிரப்பி விடுகின்றது!  எவ்வெவற்றால் இந்த சீத சவ்வுகளில் எரிச்சல் உண்டாகிறது என்பதை அடுத்து பார்க்கலாம்…

images (1)

download (1)

1)பாக்டீரியா நோய் தொற்று
2)வைரஸ் நோய் தொற்று
3)ஒவ்வாமை (Allergy )
4) சுவாசகாசம்(Asthma )
5)சைனஸ் நோய் தொற்று

உங்கள் சைனஸ் துவாரங்களை அதிகப்படியான சளி அடைத்து கொள்வதால் மேலும் பல சிக்கல்களும் ஏற்படக்கூடும்..
1)சளி தொண்டையில் இறங்குதல்( Post Nasal Drip) உண்டாகும். அதனால், தொண்டையில் புண் , இருமல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும் .
2) அதிக சளியால் , காதுகள் அடைத்து , காது நோய்தாக்கம் உண்டாகலாம்!

post_nasal_drip_2

அதிகப்படியான சளி உற்பத்தியால் ஏற்படும் தொந்தரவுகளை எப்படி தடுக்கலாம் என்று அடுத்து பார்க்கலாம்..
1) தூசியால் அல்லது ஒவ்வாமையால் உங்கள் மூக்கு தண்ணீராய் ஒழுக ஆரம்பிக்கும் போது ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மருந்தை(Anti Histamines) பரிந்துரை செய்வார்கள். இந்த ஒவ்வாமை எதிர்ப்பு மருந்து , நம் மூக்கின் உள்ளே வீங்கிய திசுக்களை சரி செய்து , மூக்கு ஒழுகுதலை நிறுத்தி விடுகிறது!

images (2)
2) அதிகப்படியான சளி உற்பத்தியால் , மூக்கடைத்து கொள்ளும் போது மூக்கடைப்பு நீக்க மருந்து(Decongestants ) பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த மருந்து, நம் நாசியில் வீங்கி இருக்கும் இரத்த நாளங்களை குறுக  செய்கிறது. அதனால் , அந்த நாளங்களுக்கு செல்லும் இரத்தம் குறைகிறது… அவ்வாறு இரத்த ஓட்டம் குறைய குறைய, அதிகப்படியான சளி குறைந்து , மூக்கடைப்பும் நீங்கி விடுகிறது!

original_CW

3) தொண்டையில் சளி இறங்குதல் பிரச்சனை(Post Nasal Drip) இருக்கும் போது , கபத்தை வெளிக்கொணர உதவும் மருந்தை(Expectorant ) பரிந்துரைப்பர். இது கட்டி சளியை , மெல்லிய சளியாக மாற்றி விடும் இயல்புடையது.. அவ்வாறு மெல்லியதாக மாறும் சளியை, ஆவி(Steam ) பிடித்து சுலபமாக நம் உடம்பை விட்டு வெளியேற்றி விடலாம்!

images (3)  mucus4

அதிகப்படியான சளியால் ,இருமல் , தொண்டை புண் என்று அவதிப்படும் போது , அது எதனால் வந்தது ,  பாக்டீரியாவாலா     இல்லை ஒவ்வாமையாலா  என்று ஆராய்ந்து அறிந்து , அதற்கு தக்க , மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்! அந்த மருந்துகள் , சளியை உற்பத்தி செய்யும் , திசுக்களின் வீக்கங்களை  குறைத்து , சளியை கட்டுக்குள் கொண்டு வந்து விடும்!

கட்டி சளி என்றால் என்னவென்று இப்பொழுது பார்த்து விடலாம்.. அதிகப்படியான சளியால் , சைனஸில் பிரச்சனை ஏற்பட்டு அவதிப்படும் போது , தொண்டையில் சளி இறங்குதல் பிரச்சனை உண்டாகும் . அச்சமயம் , தொண்டை புண் , இருமல் உண்டாகும் என ஏற்கனவே பார்த்திருந்தோம்.. இதற்கு முக்கிய காரணம் இந்த தொண்டையில் கட்டி கொள்ளும் கட்டி சளி தான் காரணம்! சளி தண்ணீர் இல்லாமல் காய்ந்து கட்டி ஆகி விடுகின்றது. சில சமயம் நாம் எடுத்து கொள்ளும் மருந்துகள் , சளியை காய்ந்து போக செய்கின்றன! இது போன்று சளி காய்ந்து , நம்மை பாடாக படுத்துவதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று பார்க்கலாம்!

1) புகை பிடித்தல் கூடாது
2) அதிகப்படியான சளியால் அவதியுறும் போது , குளிரூட்டப்பட்ட அறையிலோ , வெப்பமூட்டப்பட்ட அறையிலோ இருப்பதை தவிர்க்க வேண்டும்.
3) அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும்.
4) நம் உடம்பில் உள்ள தண்ணீரை வற்றி போகச் செய்யும் பானங்களான , காபி , தேநீர் , மதுபானம் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
5) கட்டி சளியால் அவதியுறும் போது , சளியை உலர்ந்து போக செய்யும் மருந்துகள் எடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அது பிரச்னையை இன்னும் தீவிரம் ஆக்கி விடும். அதாவது , மூக்கடைப்பு தீர்க்க உதவும் மருந்தையோ (Decongestants ) அல்லது ஒவ்வாமை எதிர்ப்பு மருந்தையோ (Anti Histamine) , இச்சமயங்களில் உட்கொள்ள கூடாது. கபத்தை வெளிக் கொணர உதவி புரியும் மருந்து(Expectorant ) தான் இந்த நேரங்களில் உட்கொள்வது பிரச்னையை தீர்க்க உதவும்!

mucus5    images (4)

கடைசியாக நெஞ்சு சளி(Phelgm ) என்றால் என்னவென்று பார்த்து விடுவோம்! இந்த நெஞ்சு சளிக்கும் , நம் மூக்கில் , சைனஸில் உற்பத்தியாகும் சளிக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது . இது வேறு , அது வேறு! மூச்சு குழாய் அழற்சி(Bronchitis ) , கபவாதம்(Pneumonia ) போன்ற நோய் தாக்கத்தால், இருமல் அறிகுறி ஏற்படும் போது தான் இந்த நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்! இந்த நெஞ்சு சளியின் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தை வைத்து என்ன மாதிரி நோய் தொற்று என்பதை கணித்து விட முடியும்! இந்த நெஞ்சு சளியில் , இரத்தம் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது!

 

இந்த சளி என்பது நம் உடம்புக்கு மிக இன்றியமையாத ஒன்று. இந்த சளியானது  சமநிலை தவறி அளவுக்கு அதிகமாக சுரந்து விடும் போது , அதை சமாளிக்க  கற்று கொண்டால் , அது சகஜமான நிலைக்கு திரும்பும் வரை சற்று ஆறுதல் அளிக்கும்!

 

 

 

 

 

This entry was posted in அறிவியல் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

17 Responses to சளி என்றால் என்ன?

 1. மனதில் என்னென்ன சந்தேகங்கள் வருமோ, அதற்கெல்லாம் பதில்கள் வரிசையாக…

  மிக்க நன்றிங்க…

  Liked by 1 person

 2. Sri Saravana சொல்கிறார்:

  அருமையான பதிவு, நல்ல விளக்கமாக எழுதியுள்ளீர்கள் அக்கா. அவசியமான பதிவு. நன்றி 🙂

  Liked by 1 person

 3. ranjani135 சொல்கிறார்:

  இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைத்தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.

  Liked by 1 person

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் அம்மா! இவ்வளவு நேரம் என் Blogger account மூலமாக வலைச்சரத்தில் எப்படி பின்னூட்டம் இடுவது என்று மண்டையை பிய்த்து கொண்டிருந்தேன்! யாரிடமாவது அதை பற்றி விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும்! போன முறை ஆதி வெங்கட் சார் அறிமுகம் செய்திருந்தார்! அப்போதும் இதே போல் தான் விழி பிதுங்கி நின்றேன்! இப்போதும்! எனக்கு ஊக்கமும் , உற்சாகமும் அளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் அம்மா 🙂

   Like

 4. உங்கள் வீட்டில் டாக்டர் என்று போர்டு மாட்டி விடலாம்!

  Liked by 1 person

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   ஹா ஹா ஹா.. ஆறுமுகம் சார்! நான் பத்து வருடமாக என் பிள்ளைகளை வளர்த்து கொண்டிருக்கிறேன்.. இந்த பத்து வருடங்களில் , நாங்கள் இருந்த ஒவ்வொரு ஊர்களிலும் நானும் என் குழந்தைகளும் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம்! யாருக்கேனும் இந்த பதிவுகள் எல்லாம் உபயோக படட்டும் என்ற நோக்கில் தான் இந்த காய்ச்சல் , சளி பற்றி எல்லாம் இந்த தளத்தில் எழுதி கொண்டிருக்கிறேன்! வருகைக்கும் , கருத்துரைக்கும் மிக்க நன்றி சார் 🙂

   Like

 5. Jana gopi சொல்கிறார்:

  அருமையான பதிவு, அவசியமான பதிவு..

  Liked by 1 person

 6. சங்கர் சொல்கிறார்:

  சமீபத்தில் படிக்க வாய்ப்புக் கினடத்தது அருமை சகோதரி

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s