சென்னையில் பெய்த கடும் மழையால் அவ்வூர் மக்கள் அனுபவித்த அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல.. ஊரெங்கும் வெள்ளம்.. திரும்பிய திசை எல்லாம் தண்ணீர்.. ஆனால் தாகம் தீர்க்க ஒரு வாய் தண்ணீர் இல்லாத அவலம்! யாரேனும் தங்கள் தாகத்தை தீர்க்க மாட்டார்களா என்று எதிர்பார்த்து நிற்பதெல்லாம் கொடுமையிலும் கொடுமை! சென்னை என்று இல்லை எந்த ஊரில் இப்படி பேய் மழை பெய்தாலும் , அவர்களுக்கும் இதே நிலைமை தான்! இது போன்ற பேரழிவு நேரங்களில், தேங்கி கிடக்கும் மழை நீரை குடிப்பதற்கு ஏற்றாற் போல் மாற்றுவது எப்படி என்று ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்!
தேங்கி கிடக்கும் மழை நீர் குட்டைகளில் நீர் எப்படி இருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை! சாதாரண நாட்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரே அசுத்தங்கள் நிறைந்ததாக தான் இருக்கும். இது போன்ற பேரழிவு காலங்களில் , சொல்லவே வேண்டாம் ,தேங்கி கிடக்கும் மழை நீரில் , சாக்கடைகள் உடைந்து, கழிவு நீரும் அவற்றோடு கலந்து விடும் வாய்ப்பு ரொம்பவே அதிகம்! இவ்வளவு அசுத்தத்தங்கள் நிறைந்த நீரை குடிப்பதற்கு ஏற்றாற் போல் மாற்றுவது எல்லாம் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை தான்! இருந்தாலும் அவசர காலங்களில், இந்த உத்திகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் என்பது என் கருத்து!
இவ்வாறு தேங்கி கிடக்கும் மழை நீரில் பாக்டீரியா(Bacteria) போன்ற எண்ணற்ற நுண்கிருமிகள் வசிக்கும். இதில் எந்த கிருமி , நம் உடம்பினுள் நுழைந்தாலும் சிக்கல் நமக்கு தான். இனி படிப்படியாக எப்படி தேங்கி கிடக்கும் நீரை குடி நீராக மாற்றுவது என்று பார்க்கலாம்!
1)வடிகட்டுதல்
தேங்கிய மழை நீரை , ஒரு சுத்தமான துணி கொண்டு முதலில் வடிகட்ட வேண்டும்! அவ்வாறு வடிகட்டும் போது , அந்நீரில் கிடக்கும் பெரிய துகள்கள் வடிகட்டப்பட்டு விடும்.
2)தெளிந்த நீர் ஆக்குதல்
நீரை தெளிவானதாக ஆக்கும் அலுமினியம் சல்பேட்டை , நீரில் சேர்க்க வேண்டும்! வடிகட்டியில் நில்லாமல் ஓடிய , மிகச் சிறிய அளவிலான அசுத்தங்கள் எல்லாம் , இந்த அலுமினியம் சல்பேட் சேர்க்கையால் , ஒன்றோடு ஒன்று கூடி , அளவில் பெரியதாகி விடும்! சிறிய அளவிலான அசுத்தங்களை நீக்குவதை விட , பெரிய அளவிலான அசுத்தங்களை சுலபமாக நீக்கி விடலாம்!தண்ணீரில் இந்த அலுமினியம் சல்பேட்டை போட்டு , குறைந்தது 30 நிமிடமாவது , அந்த தண்ணீரை ஆடாது , அசையாது விட்டு விடுவது நல்லது! அளவில் பெரியதாகி விட்ட அசுத்தங்கள், பாத்திரத்தின் அடியில் சென்று தங்கி விடும். பின் தெளிந்த நீரை , வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றி விடலாம்! இந்த அலுமினியம் சல்பேட்டை படிகாரம்(Alum ) என்று குறிப்பிடுவர்!
இது நமக்கு எந்த கெடுதலும் செய்யாது! அச்சம் ஏதும் இல்லாமல் இதை உபயோகம் செய்யலாம்! இந்த படிகாரம், கலங்கிய நீரை, தெளிவான நீராக ஆக்க வல்லது!இந்த படிகாரம் எவ்வளவு உபயோகிக்க வேண்டும் என்று ஒரு கேள்வி இப்போ உங்க மனசுல தோணி இருக்கும் இல்லையா! மூடை மூடையா எல்லாம் தேவை படாதுங்க.. ஒரு 50 கிராம் படிகாரத்தை , ஒரு 10 லிட்டர் வாளி தண்ணீரில் கலந்து அதை கொண்டு ஒரு 20 அடி ஆழ கிணற்று தண்ணீரை சுத்த படுத்தி விடலாம் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!!
3)மீண்டும் கார்பன் வடிகட்டி மூலம் வடிகட்டுதல்(Activated Carbon Filter)
இந்த நிலையில் தண்ணீர் பார்க்க ஓரளவு தெளிவாக இருந்தாலும் , நம் கண்ணுக்கே தெரியாமல் , ஆபத்தை விளைவிக்கும் துகள்கள் நிறைந்ததாக தான் இருக்கும்! அந்த தண்ணீரை , கார்பன் வடிகட்டி மூலமாக ஒரு தடவை வடிகட்டும் போது , அதில் இருக்கும் நச்சு பொருள்கள் கண்டிப்பாக வடிகட்டப்பட்டு விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! இந்த கார்பன் வடிக்கட்டி, தீங்கு செய்யக்கூடிய வேதிப்பொருட்களான குளோரின்(Chlorine) மற்றும் அத்தண்ணீரில் கலந்திருக்கும் பூச்சி கொல்லி மருந்துகளையும் நீக்க வல்லது!
தண்ணீரில் இருந்து கிளம்பும் கெட்ட நாற்றத்தையும் நீக்கி விடும்! இதனால் , தண்ணீரின் சுவை மேம்படுத்தப்பட்டு விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இத்தோடு முடிந்ததா என்று நீங்கள் அவசரப்படுவது புரிகிறது! கண்டிப்பாக இன்னும் முடியவில்லை.. மேலே படியுங்கள்! இது போன்ற வடிகட்டி எங்கே கிடைக்கிறது என்று யோசிப்போர் இங்கே கிளிக் செய்யவும்.
4)விஷக்கிருமிகளை நீக்குதல்
இந்த நிலையில் , விஷக்கிருமிகள் நீக்குவதற்காக , பொட்டாசியம் பர்மாங்கனேட்(Potassium Permanganate) உபயோகப் படுத்தப்படும்!
இதை தண்ணீரில் சேர்க்கும் போது , அதில் இருக்கும் நுண்கிருமிகள் மொத்தமும் அடிப்பட்டு போய் விடும்! சரி, இந்த பொட்டசியம் பெர்மாங்கனேடை எவ்வளவு உபயோகிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். இவ்வளவு கிராம் , அவ்வளவு கிராம் என்று எந்த கணக்கும் போட்டு மண்டையை பிய்த்து கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை! ரொம்ப சுலபங்க.. நீங்கள் சுத்தப்படுத்த போகும் நீரில் , கொஞ்சம் கொஞ்சமாக , இந்த பொட்டசியம் பெர்மாங்கனேடை போட்டு கொண்டே வாருங்கள்.. ஒரு தருணத்தில் , திடீரென்று தண்ணீர் பிங்க் நிறமாக மாற ஆரம்பிக்கும்! அத்தருணத்தில் , நீங்கள் அறிந்து கொள்ளலாம் , தண்ணீர் நுண்கிருமிகள் ஏதும் இன்றி சுத்தப்படுத்தப் பட்டு விட்டது என்று!
எவ்வளவு நேரம் வரை இந்த பிங்க் நிறம் நீடித்து நிற்குதோ , அந்த நொடி வரை தண்ணீர் சுத்தமாக நுண்கிருமிகள் ஏதும் இல்லாமல் இருக்கிறது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம்!
5)மீண்டும் வடிக்கட்டுதல்
இனி மறுபடியும் தண்ணீரை வடிக்கட்ட வேண்டும். ஏனெனில் மேலே சொல்லப்பட்ட விஷக்கிருமிகளை நீக்குதல் செயல்முறையில், விஷக்கிருமிகளை செயலிழக்க செய்ததோடு நில்லாமல் சில தேவை இல்லாத துணைப்பொருட்களையும் , அத்தண்ணீரில் உண்டாக்கி விட்டு விடும். அது மிகவும் ஆபத்தானவை. இங்கே நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். கார்பன் வடிகட்டி கொண்டு முதலில் வடிக்கட்டுவது குளோரினை நீக்குவதற்காக. இந்த குளோரினால் , துணைப்பொருள் எதுவும் உண்டாகி விடக்கூடாது என்பதற்காக. இரண்டாம் முறை வடிக்கட்டுவது , ஏதேனும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய துணைப்பொருள் எதுவும் உண்டாகி இருப்பின் அவற்றை நீக்குவதற்க்காக.
6)கொதிக்க வைத்தல்
கடைசியாக தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த நிலையில் , தண்ணீரை கொதிக்க வைக்கும் போது , அந்நீரில் ஏதேனும் , ரசாயனங்கள் கலந்திருந்தால் அவை ஆவியாகி வெளியே சென்று விடும்.
இவ்வாறு கொதிக்க வைத்த தண்ணீரை , நீண்ட நாள் சேமித்து வைக்க போகிறீர்கள் என்றால் , அதில் கொஞ்சம் சோடியம் ஹைப்போகிலோரைட் (Sodium Hypochlorite) போட்டு வைப்பது நலம். இதை ப்ளீச்(Bleech) என்று சொல்ல கேட்டிருப்பீர்கள். இது ஒரு கிருமி நாசினி . சேமித்து வைத்த தண்ணீர், நீண்ட நாட்கள் வரை கெட்டு போகாமல் பார்த்து கொள்ளும்.
குட்டைகளில் தேங்கிய மழை நீரை எப்படி குடிநீராக்குவது என்று பார்த்தோம். வெள்ளம் போன்ற அவசர காலங்களில், இனி குடிக்க நீர் இல்லாமல் அடுத்தவரை எதிர்பார்க்கும் அவலம் வேண்டாம். நமக்கு நாமே உதவி செய்து கொள்வதோடு அடுத்தவருக்கும் உதவுவதே புத்திசாலிதனம்!
படங்கள் :இணையம்
தகவல் :இணையம்
நன்றி !
முதலில் எனது ஆதரவு எங்கள் சென்னை மக்களுக்கு எப்போதும் இருக்கும் என்பதை தெரிவிக்கின்றேன்.கடவுள் துணையுடன் அவர்கள் மீண்டு வர பிரார்த்திக்கின்றேன்.———– நல்ல பயனுள்ள பதிவு மகா அக்கா.வாழ்த்துக்கள்.பல விடயங்கள் சுத்தமான வாழ்க்கை நெறிக்கு வழி காட்டுவதால் அனைவருக்கும் உபயோகமான பதிவு.நன்றி.
LikeLike
நன்றி பிரபு! உனது தொடர்ச்சியான அதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙂
LikeLiked by 1 person
பயனுள்ள பகிர்வு மஹா அருமையாக விளக்கியுள்ளீர்கள் நிஜமாக நடந்து மக்கள் பயனடைந்தால் மிகவும் நன்றாக இருக்கும். பாராட்டுக்கள்.
LikeLiked by 1 person
மிக்க நன்றி விஜிகுமாரி மேடம் 🙂
LikeLike