சுவாச பாதை நோய் தொற்று என்பது நம் உடம்பில் உள்ள சைனஸ், தொண்டை, நுரையீரல் ஆகியவற்றில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய் தொற்று.மிகவும் பரவலாக ஏற்படும் நோய் தொற்று ஜலதோஷம்.இந்த சுவாச பாதை தொற்று நோயை இரண்டு வகைகளாக பிரித்து கொள்ளலாம்.
1) மேல் சுவாச பாதை நோய் தொற்று(Upper Respiratory Tract Infection)
மூக்கு , தொண்டை , சைனஸ் ஆகியவற்றில் ஏற்படுகின்ற நோய் தொற்று
2) கீழ் சுவாச பாதை நோய் தொற்று (Lower Respiratory Tract Infection) காற்று பாதைகள் , நுரையீரல் ஆகியவற்றில் ஏற்படும் நோய் தொற்று
பெரியவர்களை விடவும் சிறு பிள்ளைகளுக்கே இந்த சுவாச பாதை நோய் தொற்று அதிகம் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். இந்த சுவாச பாதை நோய் தொற்று ரொம்பவும் எளிதாக பரவ கூடியது! நமக்கு ஜலதோஷம் போன்ற நோய் தொற்று ஏற்பட்டிருந்தால் , நம்மிடம் இருந்து அடுத்தவருக்கு பரவ, அதிகம் இல்லை , நீங்கள் தும்மும் போது அல்லது இருமும் போது, உங்கள் மூக்கில் இருந்து வெளிவரும் ஒரு துளி போதும்!
நேரடியாக தான் ஜலதோஷத்தை உண்டாக்கிய வைரஸ் பரவ வேண்டும் என்று இல்லை, மறைமுகமாகவும் பரவ கூடும். நாம் நம் ஜலதோஷம் பிடித்த மூக்கை தொட்டு விட்டு , ஏதாவது பொருளை தொடும் போது , அப்பொருளை அடுத்து தொட்டு தூக்குபவருக்கு எளிதாக பரவ கூடும்! இவ்வாறு வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்றால் , என்றென்றும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்! அவ்வப்பொழுது, கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவி , சுத்தமாக வைத்து கொள்வது நலமாக இருக்க உதவும்!
மேல் சுவாச பாதை நோய் தொற்று
1) இதில் முதல் இடத்தை பெறுவது ஜலதோஷம்
2)இரண்டாம் இடத்தை பெறுவது அடிநா அழற்சி (Tonsilitis)
அடிநாச் சதையில் மற்றும் தொண்டையின் பின் பகுதியில் இருக்கும் திசுக்களில் ஏற்படும் நோய் தொற்று.
3)மூன்றாம் இடத்தை பெறுவது சைனஸ் நோய் தொற்று (Sinusitis )
சைனஸில் ஏற்படும் நோய் தொற்று.
4) நான்காம் இடத்தை பெறுவது குரல்வளை நோய் தொற்று (laryngitis)
5)கடைசி இடத்தை பிடிப்பது சளிக்காய்ச்சல்(Flu)
மேல் சுவாச பாதை நோய் தொற்று ஏற்படும் போது தோன்றும் அறிகுறிகள் ,
1) இருமல்
2) தலைவலி
3)மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைத்தல்
4)தொண்டை புண்
5)தும்மல்
6) உடம்பு வலி
கீழ் சுவாச பாதை நோய் தொற்று
1)சளி காய்ச்சல்(Flu )
இது மேல் சுவாச பாதை, கீழ் சுவாச பாதை என்று இரண்டையும் பாதிக்க கூடிய ஒரு நோய் தொற்று
2)மூச்சு குழாய் அழற்சி(Bronchitis )
இது காற்று பாதையில் உண்டாகும் நோய் தொற்று.
3)கபவாதம்(Pneumonia )
இது நுரையீரலில் ஏற்படும் நோய் தொற்று
4)மூச்சுநுண்குழாய் அழற்சி(bronchiolitis)
இது இரண்டு வயதுக்கும் குறைவான வயதை உடைய சிறுபிள்ளைகளுக்கு சுவாச பாதையில் உள்ள நுண்குழாய்களில் ஏற்படும் நோய் தொற்று
5)காச நோய் (Tuberculosis )
விடாப்பிடியாக பாக்டீரியாவால் நுரையீரலில் ஏற்படும் நோய் தொற்று
கீழ் சுவாச பாதை நோய் தொற்று ஏற்படும் போது தோன்றும் அறிகுறிகள்
1)விடாமல் துரத்தும் இருமல் , அதனோடு சேர்ந்து வெளியே வரும் நெஞ்சு சளி.(Phelgm )
2)மார்பின் உள்ளே இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும் .
3)சுவாச விகிதம் அதிகரித்தல்
4)மூச்சு திணறல்
மேல் சுவாச பாதை தொற்று நோய்களுக்கு பெரும்பாலும் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.. நிறைய நீர் நிறைந்த ஆகாரங்கள் உட்கொள்வது மூலமாகவும் , பாராசிடமால்(Paracetamol) போன்ற வலி நிவாரணிகளை எடுத்து கொள்வது மூலமாகவும், உடம்புக்கு முழுமையான ஓய்வு கொடுப்பதன் மூலமாகவும் ஓரிரு வாரங்களில் சகஜமான வாழ்க்கைக்கு திரும்பி விடலாம்!
நம் மேல்/கீழ் சுவாச பாதையில் ஏற்படும் நோய் தொற்று, நுண்ணுயிர்களான பாக்டீரியா அல்லது வைரஸ் இவற்றால் ஏற்படுகிறது!
வைரஸ்ஸால் ஏற்படும் நோய் தொற்றுக்கு பொதுவாக மருத்துவர்கள் எதிர் உயிர்மமருந்துகள்(Antibiotics) பரிந்துரைப்பதில்லை! ஏனெனில் வைரஸ்களை கொல்லுவது அவ்வளவு சுலபமில்லை. அவை, நம் உயிரணுக்களின்(Cells ) உள்ளே இனப்பெருக்கம் செய்து வாழ கூடியது! அவை, உயிரணுக்களின் உள்ளே பதுங்கி வாழ கூடியது! அவ்வாறு பதுங்கி வாழ கூடிய நுண்ணுயிர்களை எதிர் உயிர்மமருந்துகளால் தேடி பிடித்து அழிக்க முடியாது! நம் நோய் எதிர்ப்பு அமைப்பில் உள்ள டி-லிம்போசைட்டுகள்(T-Lymphocytes) , வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரணுக்களை தேடி பிடித்து அழிக்க கூடியது! ஆக, நம் உடம்பு ஓரளவு ஆரோக்கியமாக இருந்தால், வைரஸ் நோய் தொற்று ஏற்படும் நேரங்களில் நம் நோய் எதிர்ப்பு அமைப்பே நம்மை பாதுகாத்து கொள்ளும்! ஜலதோஷம் ஒரு வகை வைரஸால் ஏற்பட கூடிய நோய் தொற்றே! அந்த வைரஸ்கள் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு பரவும் பொழுது அது தன்னை தானே மாற்றி(Mutate ) கொள்ளும் இயல்புடையது !அதனால் , இவ்வகை வைரஸ்களுக்கு தடுப்பூசிகள் எதுவும் இன்று வரை கண்டு பிடிக்க படவில்லை!
எனினும்,சில வைரஸ்களால் ஏற்படும் குளிர் கபசுரத்திற்கு (Influenza ), வைரல் எதிர்ப்பு மருந்துகள் (Anti Viral Drugs ) கொடுக்கப்பட்டு சரி செய்ய படுகின்றன!!ஆனால் , எல்லா வகை வைரஸ்களையும் இதே போன்று தடுத்து நிறுத்தி விட முடியாது!வைரஸ் நுண்ணுயிரால் , சுவாச பாதை நோய் தொற்று அடிக்கடி ஏற்பட்டு அவதி படுபவர்களுக்கு , மருத்துவர் ஃப்ளு தடுப்பூசி(Flu Vaccine) பரிந்துரைப்பார்! இதை எடுத்து கொள்ளும் போது , குளிர் கபசுரம் வராமல் அவர்களை காக்கும்! ஆனால் ஒவ்வொரு வருடமும் , புதியதாய் உருவாகும் வைரஸ்களுக்கு ஏற்ப புதிய ஃப்ளு தடுப்பூசியை எடுத்து கொள்ள வேண்டியது மிக அவசியம் !
பாக்டீரியாக்களால் ஏற்படும் சுவாச பாதை அதி தீவிர நோய் தொற்றுக்கு, மருத்துவர்கள் எதிர் உயிர்மமருந்துகள் பரிந்துரைப்பார்! எல்லா வகை பாக்டீரியா நோய் தொற்றுக்கும் எதிர் உயிர்மமருந்துகள் அவசியம் இல்லை! நம் நோய் எதிர்ப்பு அமைப்பே , நம்மை பாதுகாத்து கொள்ளும்! தீவிரமான நோய்களான கபவாதம்(Pneumonia) , காசநோய்(Tuberculosis) போன்ற நோய்களுக்கு கண்டிப்பாக எதிர் உயிர்மமருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்! மேலும், இந்த எதிர் உயிர்மமருந்துகளை மருத்துவர் எத்தனை நாளுக்கு எடுத்து கொள்ள சொல்கிறாரோ , அத்தனை நாளுக்கு தொடர் கோவையாக எடுத்து கொள்ளுவதே நல்லது! பாதியிலேயே மருந்துகளை நிறுத்தி விடும் போது , பாக்டீரியாக்கள் முழுமையாக அழிந்து விடாமல் , எஞ்சி விடும்! அந்த பாக்டீரியாக்கள், நம் உடம்பிலேயே தங்கி விடும் . காலப்போக்கில், மாற்றங்கள் அடைந்து , சில வகை எதிர் உயிர்ம மருந்துகளையே எதிர்க்கும் வல்லமை பெற்றிடும்!
பிற்காலத்தில் , அதி தீவிர நோய் தொற்று ஏற்படும் போது , நோயை தீர்க்க வேண்டிய எதிர் உயிர்மமருந்துகளே செயலற்று போகும் அபாயம் உண்டு! தேவை எதுவும் இல்லாமல் , நீங்களாக எதிர் உயிர்மமருந்துகளை எடுத்து கொள்ள கூடாது! மனிதனின் இத்தகைய முட்டாள் தனமான செயல்களால் உருவானது தான் MRSA (Methicillin Resistant Staphylococcus Aureus) . இந்த MRSA பாக்டீரியா , பல வகையான எதிர் உயிர்மமருந்துகளை எதிர்த்து நிற்கும் வல்லமை பெற்றது! இந்த பாக்டீரியாவால் நோய் தொற்று ஏற்படும் போது , உடம்பை சரி செய்வது அவ்வளவு சுலபம் கிடையாது!
இந்த பதிவு , சுவாச பாதை நோய் தொற்றுகள் பற்றிய ஒரு அறிமுகம் மட்டுமே! ஒவ்வொரு சுவாச பாதை நோய் தொற்று பற்றியும் விரிவாக அடுத்தடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்!
படங்களும், விளக்கமும் அருமை! சபாஷ் போட வைக்கும் பதிவு!
LikeLiked by 1 person
வருகைக்கும் , கருத்துரைக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் சார் 🙂
LikeLike
ஒவ்வொன்றாக… அருமையான விளக்கங்கள்… நன்றி…
LikeLiked by 1 person
மிக்க நன்றி தனபாலன் சார்! வெகு சீக்கிரத்தில் , ஒவ்வொரு நோய் தொற்றை பற்றியும் விரிவாக பதிவுகள் போடப்படும்! தவறாது வந்து படியுங்கள்! நன்றி 🙂
LikeLike
நல்ல தெளிவான பதிவு அக்கா. எனக்கு ரெண்டு நாளா டான்சில் பிரச்சனை தான் 😦
LikeLiked by 1 person
நன்றி சரவணா! இந்த டான்சில் பற்றி விரைவில் விரிவாக எழுதுகிறேன்! உனக்கு சீக்கிரமே இப்பிரச்சனை தீர்ந்து , உடம்பு நலமாகட்டும் 🙂
LikeLiked by 1 person
நன்றி அக்கா 🙂
LikeLike
சிறந்த உளநல வழிகாட்டல்
தொடருங்கள்
LikeLiked by 1 person
வருகைக்கும் , கருத்துரைக்கும் மிக்க நன்றி யார்ல்பாவணன் சார் 🙂
LikeLike
நீங்கள் வைத்தியரா?ஒரு வைத்தியரால் கூட இவ்வாறு தெளிவாக விளக்கம் அளிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
பதிவிற்கு நன்றி.
நன்றி மஹா மேடம்.
LikeLike