டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி

dengue

டெங்கு காய்ச்சல் என்பது மிக மோசமான டெங்கு வைரசால் , கொசுவின் மூலமாக பரவக் கூடியது!இந்த காய்ச்சல் வந்தால் தோன்றும் முதல் அறிகுறிகள் , தலைவலி , கை , கால் மற்றும் உடம்பு வலி ,மற்றும் மிக கடுமையான காய்ச்சல்! இக் காய்ச்சல் வந்த சிலருக்கு , தோலில் ஆங்காங்கே, தட்டம்மை போது வரும் தடிப்புகள் போல தடிப்புகள் உண்டாகும். ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு விட்டால் , மிக கொடூரமான , இரத்தபெருக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலாக மாறி ,உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும்! முறையாக நோயாளிகளை , கவனிக்காத பட்சத்தில், இரத்தபெருக்கு உண்டாகும்! இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை , மிக குறைந்து போகும்!

dengue2

டெங்கு காய்ச்சலுக்கு இன்று வரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை! அதனால் , இக்காய்ச்சல் வந்தால் , மிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்! இது ஏடிஸ் என்ற பெயரால் அழைக்கப்படும் ஒரு வகை கொசுவால் பரவக்கூடியது! டெங்கு வராமல் தங்களை காத்து கொள்ள நினைப்பவர்கள் , கொசு தன்னை கடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது ரொம்பவே அவசியம்!

dengue8

பொதுவாக , டெங்கு காய்ச்சலால் அவதி படுபவருக்கு , மருந்து என்று எதுவும் கிடையாது! மிதமான டெங்கு காய்ச்சலால் அவதிபடுபவருக்கு , வாய் வழியாக அல்லது நரம்பு வழியாக நீர்சத்து உடம்பின் உள்ளே ஏற்றப்படும்! அவ்வாறு நீர்ச்சத்து ஏற்றப்படுவதனால்  , உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்! மிக கடுமையான டெங்குவால் பாதிக்க பட்டவர்களுக்கு , உடம்பில் நரம்பு வழியாக , நீர்ச்சத்து ஏற்றப்படுவதோடு , இரத்தமும் ஏற்றப்படும்!!

டெங்கு காய்ச்சலை மூன்று கட்டமாக பிரித்து கொள்ளலாம்..
1) Febrile phase காய்ச்சல் கட்டம்
Febrile கட்டம் என்றால் கடுமையான காய்ச்சல் வரக்கூடிய முதல் கட்டம். கடுமையான காய்ச்சல் என்றால் 104, 105, 106 என்று கொளுத்தி தள்ள கூடிய காய்ச்சல் .கூடவே , உடம்பு வலியும் , தலை வலியும் வரும்! சிலருக்கு வாந்தியும் இருக்கும்! இந்த சிரமங்கள் இரண்டிலிருந்து ஏழு நாட்கள் வரை இருக்கும்! வெகு சிலருக்கு , சரும தடிப்புகள் உண்டாகும்! அவை ஒரு ஏழு நாட்கள் வரை இருந்து விட்டு பின்பு மறையும்!சிலருக்கு வாய் மற்றும் மூக்கின் உள்ளே அமைந்திருக்கும் சளிச்சவ்வுகளில் இரத்த பெருக்கு உண்டாகும். இந்த காய்ச்சல் சற்று வித்தியாசமானது தான்! ஒரு நாள் காய்ச்சலே இல்லாதது போல் தோன்றும்! மறுநாள் , வியாதி வந்தவரை போட்டு பாடாய் படுத்தி எடுத்து விடும்!

dengue3

2)Critical Phase (நெருக்கடியான கட்டம்)
சிலரே இந்த நெருக்கடியான கட்டத்துக்கு செல்கின்றனர். இந்த கால கட்டத்தில் , இரத்த அணுக்களை ஏந்திச் செல்லும் , Plasma என்ற நிறமற்ற திரவம் , இரத்த நாளத்தை விட்டு வெளியேறி செல்கிறது!இந்த நிலை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை நீடிக்கும்!மார்பகம் , அடி வயிற்று பகுதிகளில் , இந்த நிறமற்ற திரவம் , குவிந்து கொள்கிறது !இவ்வாறு , இந்த நிறமற்ற திரவம் , இரத்த அணுக்களை ஏந்தி செல்லும் வேலையை செய்யாமல் பந்த் செய்வதால் , முக்கியமான உடல் உறுப்புகளுக்கு , இரத்தம் முழுமையாக விநியோகம் செய்யப்படாமல் , உடம்பு திணறி போகும் !இதனால் , பல உறுப்புகள் செயல் படாமல் போக கூடும் !மேலும் , இரைப்பை குடலில் , அதிகமான இரத்த பெருக்கு உண்டாகக்கூடும்!

3)Recovery Phase(மீட்பு கட்டம் )
இந்த மீட்பு கட்டத்தில் , இரத்த நாளத்தை விட்டு நீங்கி சென்ற , அந்த நிறமற்ற திரவம் , திரும்பவும் தன் இருப்பிடம் வந்து சேரும் ! இது ஒரு இரண்டு நாட்களுக்கு நீடிக்கும்! உடல் நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படும் ! அத்தகைய தருணத்தில் , ஒரு சிலருக்கு , உடம்பு முழுவதும் ஒரு அரிப்பு தோன்றும்!

கொசுவால் எப்படி டெங்கு காய்ச்சல் பரவுகிறது என்று அடுத்து பார்க்கலாம்..
டெங்கு வைரஸை சுமந்து செல்லும் கொசு , ஒரு மனிதனை கடிக்கும் போது , அதன் எச்சில் வழியாக வைரஸ் , மனித உடம்பினுள் நுழைந்து விடும்! அவை , வெள்ளை இரத்த அணுக்களை கெட்டியாக பிடித்து கொள்ளும்! பின்னர் , மெதுவாக , வெள்ளை இரத்த அணுக்களின் உள்நுழைந்து , தன் வம்சத்தை வளர்க்கும் அதாவது தன் எண்ணிக்கையை பெருக்க ஆரம்பிக்கும்! இப்படி அத்துமீறி அந்தப்புரம் நுழைந்து தன் எண்ணிக்கையை கூட்டி கொண்டிருக்கும் வைரஸின் அட்டூழியம் தாங்க மாட்டாமல் , வெள்ளை இரத்த அணுக்கள் , சில Signalling Protiens , அதாவது புறாக்கள் மூலமாக , தூது அனுப்ப, உடம்பு போருக்கு தயாராகிறது! அதன் விளைவாய் , கடுமையான காய்ச்சல் , உடம்பு வலி , வாந்தி , அது , இதுவென்று எல்லா பிரச்சனைகளையும் உண்டு செய்கிறது உடம்பு! கடுமையான நோய் தாக்குதலுக்கு ஆட்பட்டோருக்கு, கல்லீரல்(Liver ) , எலும்பு மஜ்ஜை(Bone Marrow) போன்ற முக்கியமான பாகங்கள் அதிகமாக  பாதிப்படையும் !! இரத்த நாளங்களில் ,இரத்த அணுக்களை சுமந்து செல்லும் நிறமற்ற திரவம், தனியாக பிரிந்து சென்று , உடம்பில் ஆங்காங்கே இருக்கும் புழைகளில்(cavities ) சென்று தங்கி விடும்! இதனால்,முக்கியமான உறுப்புகளுக்கு , இரத்தம் சரியாக ஓட முடியாது தடை பட்டு விடும்! இந்த எலும்பு மஜ்ஜை(Bone Marrow ) செயல் பிறழ்ச்சியால் , தட்டணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து போகும் ! இந்த தட்டணுக்கள் தான் , இரத்தம் உறைவதற்கு மிகுந்த துணை புரிவது ! இது எண்ணிக்கையில் கணிசமாக குறையும் போது , இரத்தம் உறைய முடியாமல் , இரத்த பெருக்கு அதிகமாகும் ! நெருக்கடியான கட்டத்தில் , இரத்த பெருக்கு அதிகமாக உண்டாவதற்கு , இது தான் முக்கிய காரணம் !!

இனி டெங்குவுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! இந்த டெங்கு காய்ச்சல் பற்றி கேள்வி பட்டதுண்டு ஆனால் என் குழந்தைகளுக்கு வந்த போது தான் அதன் கொடூரத்தை முழுதும் அறிந்தேன்! நன்றாக தான் காலையில் ஸ்கூலுக்கு கிளம்பினார்கள்! மதியமே கடும் காய்ச்சலோடு வீடு திரும்பினர்! எதற்கு காய்ச்சல் என்றே புரியவில்லை! அறிகுறி எதுவும் இல்லை! சாப்பாடு ரசிக்க வில்லை! எதை கொடுத்தாலும் அதை சாப்பிட்டு விட்டு வாந்தி செய்தார்கள்! பயத்தில் முதல் நாளே ஹாஸ்பிடலுக்கு சென்று விட்டோம்! எந்த அறிகுறியும் இல்லாததால் , டாக்டர் இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பின்பு பார்க்கலாம் என்று வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

பின்னர் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை பாராசிடமால் மாத்திரை மட்டும் கொடுத்து கொண்டே வந்தேன்! காய்ச்சல் குறைந்த பாடு இல்லை! இரண்டாவது நாளும் அது போலவே! இருவருக்கும் ஒன்றுமே சாப்பிட முடியவில்லை! அப்படியே கட்டாய படுத்தி குடுத்தாலும் வாந்தி வந்து அத்தனையும் வெளியேறி விட்டது! கிட்டத்தட்ட இரண்டு நாட்களும் எதுவும் சாப்பிடவில்லை என்பது தான் உண்மை! மூன்றாவது நாள் பெரிய பையனுக்கு , உடம்பு முழுக்க தடிப்புகள் தோன்ற ஆரம்பித்தது!

dengue5

வீட்டில் இருக்க முடியாமல் , உடனே ஹாஸ்பிடல் சென்று , இரத்த பரிசோதனை இருவருக்கும் செய்து விட்டு வந்தோம்! பின் சாயுங்காலம் , டாக்டரை சந்திக்கும் போது தான் தெரிந்தது , இருவரும் ஒரு வித வைரல் காய்ச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று!! தட்டணுக்கள் மிகவும் குறைந்துள்ளது , எனவே உடனடியாக ஹாஸ்பிடலில் இருவரையும் அட்மிட் செய்து விடுவது நலம் என்று அவர் அறிவுறுத்தவே , உடனடியாக அவ்வேலையில் இறங்கினோம் ! அப்போ கூட , இருவருக்கும் வந்திருப்பது டெங்கு காய்ச்சல் என்று தெரியாது ! மேலும் டாக்டர் சொன்னார் , இது வைரல் காய்ச்சல் என்பதால் மருந்து எதுவும் கிடையாது! சலைன் (Saline ) ஏற்றுவது ஒன்றே வழி என்று சொன்னார்! சலைன் என்றால் உப்பு கலந்த நீர்! அது நம் உடம்பினுள் இருக்கும் கிருமிகளை அழிக்க வல்லது! மேலும் , உடம்பில் நீர் சத்து குறையாமல் , உடம்பை காத்து கொள்ளும்! அன்று இரவே , ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி சலைன் இருவருக்கும் நரம்பு வழியாக ஏறி கொண்டிருந்தது! சிறிது நேரத்திலேயே , இருவருக்கும் நன்கு வியர்த்து கொட்டியது! என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை ! ஆனால் , மிக லேட்டாகத்தான் புரிந்தது , இந்த காய்ச்சல் ஏறும் , இறங்கும் வகையை சார்ந்தது என்று !

dengue7

அடுத்த நாளும் இதே கதை தான்! சலைனொடு சேர்த்து வாந்தி இல்லாமல் இருக்க ஏதோ மருந்து , அப்புறம் ஏதோ ஆண்டிபயாடிக் என்று ஏற்றினார்கள்! மேலும் , சரும தடிப்புகளை போக்குவதற்கும் மருந்து கொடுத்தார்கள் ! சாப்பாடு ஒன்றும்  உள் செல்லவில்லை! மேலும் , டாக்டரும் எதையும் வற்புறுத்தி கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்ததால் நான்காவது நாளாய் அவர்கள் எதுவும் சாப்பிட வில்லை! ஐந்தாவது நாள்  தான் கொஞ்சமாக  இட்லி, சாப்பிட வேண்டும் என்ற கடனுக்கு இரண்டு மூன்று வாய் வாங்கி கொண்டார்கள் ! அன்றும் இரத்த பரிசோதனை செய்ததில் , ஒருவனுக்கு தட்டணுக்கள் ஏறியும் , மற்றொருவனுக்கு , தட்டணுக்கள் மிக இறங்கியும் காணப்பட்டது! மிகுந்த மன சலனம் உண்டான தருணங்கள் அவை!

மனம் கேட்காமல் , இரத்த பரிசோதனை ரிப்போர்டை  ஒரு டாக்டர் நண்பருக்கு  அனுப்பி கேட்டதற்கு , அவர் தட்டணுக்கள் குறைந்திருந்தாலே அது டெங்கு தான் என்று அடித்து கூறினார்!  நாங்கள் இருப்பது ஆந்திராவில்! ஏனோ , இங்கே , டாக்டர்  டெங்கு என்றே குறிப்பிடவில்லை! அதற்குள் உறவினர்களுக்கு செய்தி பரவ , உடனடியாக தகவல் அறிந்தோர் டெங்கு பற்றி தங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொண்டனர் !அதிலே என் தாய் மாமா எனக்கு நிலவேம்பு பற்றியும் , பப்பாளி இலைச் சாறு பற்றி   எடுத்துரைத்து , அந்த இரு கஷாயத்தையும்  உடனடியாக பிள்ளைகளுக்கு கொடுக்க அறிவுறுத்தினார்!  என் பெற்றோர்கள் , எனக்கு உதவி செய்வதற்காக , இங்கே கிளம்பி வந்து விட்டனர் !வரும் போது அவர்கள் நிலவேம்பு கஷாயம் செய்வதற்கான மருந்தையும், தமிழ் நாட்டிலிருந்து எடுத்து கொண்டே வந்தனர்!எனக்கு அந்த நேரத்தில் நிலவேம்பு மற்றும் பப்பாளி இலை சாறின் மகத்துவத்தை  பற்றி , தக்க சமயத்தில் எடுத்து கூறி என்னை அக்கஷாயத்தை என் பிள்ளைகளுக்கு கொடுக்க என் மனதை தயார் செய்த அத்தனை உறவினர்களுக்கும் நன்றி சொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன் ! அந்த நிலவேம்பு சாறு கொடுத்த பிறகு நடந்தவை எல்லாம் அத்தனையும் நம்ப முடியாத ஆச்சரியங்கள் !!

10ml நில வேம்பு கஷாயம்

10ml நில வேம்பு கஷாயம்

நில வேம்பு கஷாயம் குடித்த ஓரிரு நாளில் , என் பிள்ளைகள் இருவருக்குமே , சிறிதளவு பசி எடுக்க ஆரம்பித்தது! ஓரளவு சாப்பிட முடிந்தது அவர்களால்!  நித்தம் , காலையில் , அவர்கள் சாப்பிடுவதற்கு , பதினைந்து நிமிடம் முன்பு , நிலவேம்பு கஷாயத்தை ஒரு 10ml கசக்க கசக்க குடிக்க வைத்தேன்! அதன் பிறகு , ஒரு நாள் களித்து எடுத்த இரத்த பரிசோதனையில் , தட்டணுக்கள் கிடு கிடுவென்று ஒரே நாளில் உயரவில்லை என்றாலும் , ஓரளவு உயர்ந்திருந்தது! அடுத்து வந்த நாட்களில் , பசி நன்றாகவே எடுக்க , அவர்களுக்கு பிடித்த , ஆரோக்கிய உணவு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சாப்பிட வைத்தோம்! காய்ச்சல் வந்து கொண்டும் போய் கொண்டே தான் இருந்தது! ஆனால் , காய்ச்சலின் அளவும் குறைந்திருந்தது! அதாவது 105 என்று வந்த காய்ச்சல் இப்போ 103 102 என்று வந்து கொண்டிருந்தது! அடுத்தடுத்து வந்த நாட்களில் , தட்டணுக்கள் சர்ரென்று  மேலே உயர்ந்து விட்டது!  காய்ச்சலும் படிப்படியாக 100 99 என்று குறைந்து கொண்டே வந்தது! இந்த நில வேம்பு கஷாயம் , பசியை தூண்டி விட்டது போக , உடம்பு வலியையும் நீக்கி விடுகின்றது!

dengue6

பப்பாளி இலை சாறு கூட ஒரே ஒரு நாள் தான் கொடுத்தேன்! பப்பாளி சாறின் மகத்துவம் பற்றி அறிய இங்கே கிளிக்  செய்யவும்! மேலும் நில வேம்பு கஷாயம் எப்படி செய்ய வேண்டும் என்று சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் எம்.பிச்சையா குமார் தெரிவித்துள்ளார். அதை பற்றி முழுதாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! இந்த இணைப்பை  எங்களுக்கு தக்க சமயத்தில் கொடுத்து உதவிய  நண்பருக்கு இங்கே நன்றி சொல்லியே ஆகணும்! கஷாயம் எப்படி செய்யணும்! குழந்தைகளுக்கு எவ்வளவு கொடுக்கணும் , எத்தனை முறை கொடுக்கணும் என்பதை கட்டாயம் இணைப்புகளுக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் !

டெங்கு காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு அதிக நீர்ச்சத்து உள்ள ஆகாரங்கள் கொடுப்பது நல்லது! சாத்து குடி ஜூஸ் , மாதுளை ஜூஸ் , பப்பாளி பழம் போன்றவை மிகவும் நல்லது!காய்கறி சூப் , அசைவம் சாப்பிடுபவர்கள் ஆட்டின் நெஞ்செலும்பு சூப் போன்றவை ரொம்பவே நல்லது! நீர்சத்து அதிகமான ஆகாரங்கள் உட்கொள்ளும் போது , தட்டணுக்கள் எண்ணிக்கையில் விரைவில் அதிகமாகும்!

டெங்கு காய்ச்சல் மிக மோசமானது! கொசு கடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்! அப்படியே கடித்து டெங்கு காய்ச்சல் வந்து விட்டாலும் , முறையே சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள்! நில வேம்பு கஷாயமும் , பப்பாளி இலை சாறும் மருத்துவர்களின் பரிந்துரைப்படி எடுத்து கொண்டால் , விரைவில் மீண்டு வெளியே வந்து விடலாம்! நன்றி !

 

 

Advertisement
This entry was posted in அறிவியல், வகைப்படுத்தப்படாதது and tagged , , , . Bookmark the permalink.

15 Responses to டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி

 1. பிரபுவின் சொல்கிறார்:

  ஆகா மிக அருமையான பதிவை அருமையாக போட்டிருக்கிறீர்கள் அக்கா.நான் இப்போது நெதர்லாந்துக்கு என் உறவினரைப் பார்க்க வந்துள்ளதால் உங்கள்,என்,யாருடைய வலைத்தளத்திற்கும் வர முடியவில்லை.அது மிகவும் கவலை தான்.இலங்கை வந்தவுடன் தொடர்ச்சியாக வருவேன்.தொடர்ச்சியாக எனது வலைத் தளத்திலும் எழுதுவேன்.///மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அக்கா.ஒரு வைத்தியர் கூட இவ்வாறு விளக்கம் கொடுக்க முடியாது.நன்றி அக்கா.👏👏👏👏

  Liked by 1 person

 2. பிரபுவின் சொல்கிறார்:

  Reblogged this on பிரபுவின் and commented:
  அருமையான இந்தப் பதிவை அனைவரும் படித்துப் பயன் பெறுக.நன்றி அக்கா.

  Like

 3. haaikavigmailcom சொல்கிறார்:

  மிக அருமையான, பயனுள்ள பதிவு . வாழ்த்துக்கள் மஹா !

  Liked by 1 person

 4. பயனுள்ள பதிவு… நன்றி..

  Liked by 1 person

 5. mahalakshmivijayan சொல்கிறார்:

  Reblogged this on எண்ணங்கள் பலவிதம் and commented:

  டெங்குவோடு என் சொந்த அனுபவங்கள்…

  Like

 6. Sri Saravana சொல்கிறார்:

  மிகவும் விளக்கமாக எழுதியுள்ளீர்கள் அக்கா. டெங்கு மிக ஆபத்தான விடயம்தான். இங்கும், அது தாக்கி, உருக்குலைந்து போனவர்களை பார்த்துள்ளேன். ஒழுங்கான மருத்துவம் இன்றி, மீண்டு வருவது கடினம் தான். நல்ல பதிவு!

  Liked by 2 people

 7. vijikumari சொல்கிறார்:

  அருமையான பயனுள்ள பதிவு நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவு பக்கம் வந்துள்ளதாக தெரிகிறது பாராட்டுக்கள் மஹா

  Like

 8. நிறைமதி சொல்கிறார்:

  எனது 1 வயது மகளுக்கு தற்போது ஜுரம் வந்துள்ளது. இரத்தப் பரிசோதனையில் இரத்தத் தட்டணுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மருத்துவர் கூறுகிறார். இதற்கு என்ன செய்ய வேண்டும்

  Like

  • mahalakshmivijayan சொல்கிறார்:

   கவலை வேண்டாம்.. இந்த பதிவில் குறிப்பிட்டு இருப்பது போல் நிலவேம்பு கஷாயம் தயாரித்து ஒரு 5ml மட்டும் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் வெறும் வயிற்றில் குடுத்து வாருங்கள். பப்பாளி இலை சாறு கொடுப்பதும் நல்ல பலன் கொடுக்கும். கஷாயம் குடித்து ஒரு மணி நேரம் பின்பே சாப்பாடு கொடுங்கள். தொடர்ந்து சில நாட்கள் நிலவேம்பு கஷாயத்தை தொடர்ச்சியாக கொடுத்து வாருங்கள். உங்கள் குழந்தைக்கு சத்தான சாப்பாடு கொடுங்கள். இரத்தத்தில் தட்டணுக்கள் கூட ஆரம்பிக்கும்.

   Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s