மழையை விரும்பாதவர் இவ்வுலகில் யாவரும் இலர்! கார் மேகத்தை கண்டு விட்டாலே , மயில் தன் அழகிய தோகையை விரித்து நடனம் ஆடுமாம்! அது சரி , அது என்ன கார் மேகம்? கார் மேகம் என்றால் கருத்த மழை மேகம்! பொதுவாக , மேகம் , வெள்ளை நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும்! மழை காலங்களில் மட்டும் , இந்த மேகத்துக்கு யார் கருப்பு வண்ணம் அடித்து விடுகிறார்கள் என்ற ஐயம் மேலிடுகிறது அல்லவா! கார் வண்ண மேகத்தின் ரகசியத்தை முதலில் அறிந்து கொள்வோம்!
அதற்கு முன்னே ,மேகம் என்பது என்ன என்று முதலில் அறிந்து கொள்வோம். சிறு சிறு தண்ணீர் துளிகள் மற்றும் சிறு சிறு பனிக்கட்டி படிகங்களும் பெருந்திரலாக காற்றில் மிதப்பதே மேகம்!சிறு சிறு தண்ணீர் துளிகளும் , பனிக்கட்டி படிகங்களும் எப்படி மேகமாக உருவாகுகிறது?? ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.. ஒரு கேள்வி எழுந்தால் , அதற்கு விடை இல்லாமலா இருக்கும்.. கேளுங்கள்.. சூரியனின் வெப்பத்தை தாங்க மாட்டாமல் , நிலத்தில் இருக்கும் தண்ணீர் , கடல் , குளம் , ஆறு ஆகியவற்றில் இருக்கும் தண்ணீர் , மரங்கள் , செடிகள் , கொடிகள் வெளியிடும் தண்ணீர் என்று அனைத்தும் ஆவியாகி விடுகின்றன.. இவ்வாறு ஆவியாகும் நீரில் , சிலது , விண்ணோக்கி பயணப்படுகின்றன !அவ்வாறு மேலெழும்பும் நீராவி , மேலே மேலே செல்ல செல்ல , குளிர்ந்து , சிறு சிறு தண்ணீர் துளிகள் ஆகி விடுகிறது இல்லையேல் உறைந்து சிறு சிறு பனிக்கட்டி படிகங்கள் ஆகி விடுகிறது . அவ்வாறு தண்ணீர் துளிகளாகவும் , பனிக்கட்டி படிகங்களாகவும் ,மாற்றம் அடைந்து விட்ட நீராவி, காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தூசி படலத்தில் , ஒட்டிக் கொண்டு மேகங்களாக உருமாறி விடுகிறது!
மேகங்களுக்கு உண்மையில் நிறம் எதுவும் கிடையாது! ஆனால் , நம் கண்ணுக்கு அவை , வெள்ளை நிறத்திலும் , சாம்பல் நிறத்திலும் காட்சி தருகின்றன. மேகங்கள் , தன்னுடைய வடிவத்தை மாற்றி கொண்டே இருக்கும்! அது ஏனெனில் , மேலெழும் வெப்ப காற்று , மேகத்தை வந்தடையும் போது , அக்காற்றின் வெப்பம் தாங்கமாட்டாமல் , மேகங்கள் சற்றே ஆவியாகி விடுகின்றன! தோற்றம் , பரிமாணம் , வடிவம் மற்றும் அமைப்பை பொறுத்து மேகங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1) ஸ்ட்ராடஸ் மேகங்கள்(Stratus Clouds) , படுக்கை விரிப்பை போன்றது.
2)கிமுளுஸ் மேகங்களை(Cumulus Clouds) , முகிற் கூட்டத் திரள் என்று அழகு தமிழில் சொல்வர். இவை , ஒன்றன் மேல் ஒன்றாக , அழகாக , குவிக்கப்பட்ட , திகைப்பு ஊட்டக்கூடிய வெள்ளை மேகங்கள்.இவ்வகை மேகங்கள் , சிறு சிறு தண்ணீர் துளிகளை தன்னுள்ளே கொண்டது!
3)சிர்ருஸ் மேகங்களை(Cirrus clouds) உயர் வானத்து முகில் வகை என்று குறிப்பிடுவர். ஆம் , இவை , மிக உயரத்தில் காணப்படும் மேகங்கள். இவை சுருள் சுருளாய் , அழகான வெள்ளை நிறத்தில் காணப்படும். இவ்வகை மேகங்கள் , சிறு சிறு பனிக்கட்டி படிகங்களை தன்னுள்ளே கொண்டது!
மேலே குறிப்பிடப்பட்ட மூன்று வகை மேகங்களிலும் , சிறு சிறு தண்ணீர் துளிகள் அல்லது பனிக்கட்டி படிகங்கள் தளர்வாக கட்டப்பட்டிருக்கும். அதனால் , இவ்வகை மேகத்தின் ஊடே , வெளிச்சம் ,சுலபமாக ஊடுருவி செல்ல முடியும்!
4)அல்டோ ஸ்ட்ராடஸ் மேகங்கள்(Alto Stratus clouds) , அழகாக விரித்த , வெள்ளை மற்றும் சாம்பல் நிற படுக்கை விரிப்பு போல வானத்தில் காட்சி அளிக்கும். சில நேரங்களில் , இவ்வகை மேகம் , மிக அடர்த்தியாக இருக்கும் காரணத்தினால் , பிரகாசிக்கும் சூரியனை , வெள்ளி போல் தகதகக்கும் , சந்திரனை கூட மறைத்து விடும் .
5) நிம்போ ஸ்ட்ராடஸ் மேகங்கள்(Nimbo Stratus clouds), உயர் வானத்தில் காணப்படும் மேகம். இவை குறிப்பிட்ட வடிவில் இல்லாமல் , தன் வடிவத்தை மாற்றி கொண்டே இருக்கும் இயல்புடையது. அவை , அடர்ந்த சாம்பல் நிறத்தில் , ஒரே விதமாக காணப்படும்.
6)கிமுளோ நிம்பஸ் மேகங்கள்(Cumulo Nimbus clouds) தான் உண்மையான மழை மேகங்கள்! இவற்றை கார் மேகம் என்று சொல்லலாம். நல்ல கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். இவ்வகை மேகத்தின் ஊடே , வெளிச்சம் ஊடுருவி செல்ல இயலாது! ஏனெனில், சிறு சிறு தண்ணீர் துளிகள் அல்லது சிறு சிறு பனிக்கட்டி படிகங்கள் , மேகத்தின் உள்ளே மிக அடர்த்தியாக கட்டப்பட்டிருக்கும்!
ஆனால் , இந்த கார் மேகம் , நம் கண்ணுக்கு புலப்படுவது போல் , நிஜமாகவே கருப்பு வண்ணத்தில் இருக்காது . இந்த கார்மேகத்தின் மேல் , வானூர்தியில் சென்று பார்த்தால் , உண்மை விளங்கும்! வானூர்தியில் அமர்ந்து பார்க்கும் பொழுது , இவ்வகை கார் மேகங்கள் , பளிச் என்ற வெண்மை நிறத்தில் காட்சி அளித்து , காண்போரை திகைப்பூட்டும்! இவ்வகை மேகத்தின் மேலே , வெளிச்சம் பட்டு தெறிப்பதனால் ,வானூர்தியில் அமர்ந்து பார்ப்பவருக்கு வெள்ளை நிறத்திலும் , பூமியில் நின்று பார்ப்பவருக்கு ,மழை மேகமாய் ,கருத்த நிறத்திலும் ஒரே நேரத்தில் காட்சி அளிக்கிறது !
வகை வகையாய் மேகங்களை பார்த்தாயிற்று!இனி நமக்கு ஜூன் மாதத்தில் இருந்து செப்டெம்பர் மாதம் வரை கொட்டோ கொட்டென்று கொட்டும் மழையை கொண்டு வரும் தென்மேற்கு பருவ காற்றை பற்றி ஆராய்ந்து அறிவோம்! இந்த தென் மேற்கு பருவ காற்று எங்கிருந்து மழையை கொண்டு வருகிறது?? அந்த சிதம்பர ரகசியத்தை இன்று எப்படியாவது போட்டு உடைத்து விடுவோம்! அது என்னவெனில் , சூரியனின் வெப்பத்தால் , நிலம் ஆனது ஓரளவு வெப்பமாகிறது . ஆனால் , நிலத்தின் மேல் உள்ள காற்று சூரியனின் வெப்பத்தை தாங்க மாட்டாமல் கிடுகிடுவென வெப்பமடைந்து விடுகிறது!
அதே நேரம் , கடல் மிக நிதானமாக வெப்பமடைகிறது! சூரிய கதிர்கள் , கிட்டத்தட்ட 200 மீட்டர் ஆழம் வரை , ஊடுருவி உள்நுழைகின்றன! ஆதலால் , கடலின் மேல் உள்ள காற்று குளிர்ந்த காற்றாகவே இருக்கிறது! நிலத்தின் மேல் உள்ள காற்று , கடலின் மேல் உள்ள காற்று , இரண்டுக்கும் இடையே இருக்கும் வெப்ப வித்தியாசம் கிட்டத்தட்ட 5-10 டிகிரி இருக்குமாம்!
இந்த வெப்ப சலனத்தால் ,சூடான நிலக்காற்று மேலெழும்புகிறது. அவ்வாறு மேலே எழும்பிய சூடான காற்று இருந்த இடத்தை நிரப்ப , குளிர்ந்த கடல் காற்று வேறு வழியின்றி நிலத்தை நோக்கி நுழைகிறது. இது போன்ற நிகழ்வுகளே , பருவ காற்று வீச ஆரம்பிப்பதற்கு உந்து சக்தியாக திகழ்கின்றன!
வெயில் காலத்தில் , ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் தார் பாலைவனம் மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளும் , கடுமையாக வெப்பமடைகிறது .இதனால் இந்த நிலங்களின் மேல் இருக்கும் காற்று சூடாகி மேல் எழும்புகிறது! இந்த நிலங்களின் மேல் , காற்று சூடாகி மேல் எழுவதால் ஒரு வெற்றிடம் உண்டாகிறது.. அந்த வெற்றிடத்தை நிறைவு செய்ய , குளிர்ந்த ஈரக் காற்று , இந்தியப் பெருங்கடலில் இருந்து, தென் மேற்கு திசையில் கிளம்புகிறது! அவ்வாறு கிளம்பிய ஈரக்காற்று இமாலய மலையை நோக்கி இழுக்கப்படுகிறது. இமாலய மலை, ஒரு தடுப்பு சுவர் போல் செயல்படுகிறது!
இந்த தென் மேற்கு பருவ மழை , ஜூன் மாத முதல் வாரத்தில் ஆரம்பித்து செப்டெம்பர் மாத கடைசி வரை பெய்யென பெய்யும் ஒரு மழை! இந்திய பெருங்கடலில் இருந்து ,தென் மேற்கு திசையில் இருந்து வீசும் ஈரக்காற்றால், உண்டாகும் தென் மேற்கு பருவ மழை , தென் இந்தியாவில் நுழைந்ததும் , அதன் அமைப்பு காரணமாக , இரண்டு கிளைகளாக பிரிந்து கொள்கிறது. அவை ,
1) அரபி கடல் கிளை
2)வங்காள விரிகுடா கிளை
இந்த, தென் மேற்கு பருவ காற்று (அரபி கடல் கிளை ), முதலில் , மேற்கு தொடர்ச்சி மலைகளை சென்று ஒரு அடி அடிக்கறது.. ஆக, கேரள மாநிலம் தான் , தென் மேற்கு பருவ மழையை முதலில் பெறுகிறது! பின்னர் , அவை , மேற்கு தொடர்ச்சி மலைகள் நெடுகிலும்(கடலோர பகுதிகளில்) , மழையை பொழிந்து , பின் அம்மலைத்தொடர்ச்சியின் வடக்கே நகர்ந்து செல்கிறது!
அடுத்து தென் மேற்கு பருவ காற்று (வங்காள விரிகுடா கிளை) பற்றி பார்க்கலாம்! இந்த காற்று வங்காள விரிகுடா மேலாக அடித்து , வட கிழக்கு இந்தியா மற்றும் வங்காளம் வழியாக சென்று கிழக்கு இமாலய மலையை சென்றடைகிறது ! செல்லும் வழியே , வங்காள விரிகுடாவில் , சொட்ட சொட்ட ஈரத்தை அள்ளிக் கொண்டு செல்கிறது இந்த தென் மேற்கு பருவ காற்று! அங்கே , கொட்டோ கொட்டென்று , மழையை கொட்டி தீர்த்து விட்டு , இந்த தென் மேற்கு பருவ காற்று , மேற்கு நோக்கி திரும்புகிறது! அங்கே , சிந்து நதிக்கும் , கங்கை நதிக்கும் இடையே இருக்கும் சமவெளி பகுதியை , வழி நெடுகிலும் ஆனந்தமாய் சொட்ட சொட்ட நனைத்து செல்கிறது!
இந்த தென் மேற்கு பருவ காற்று , கடலில் இருந்து நிலத்துக்கு வீசுபவை! அடுத்ததாக , நிலத்தில் இருந்து கடலுக்கு வீசும் வட கிழக்கு பருவகாற்று ஒன்று உண்டு! அதை உலர்ந்த ,அதிக ஈரமில்லாத பருவ காற்று என்று அழைப்பர்!இது இமாலயத்தில் இருந்து , சிந்து நதி மற்றும் கங்கை நதிக்கு இடையே இருக்கும் சமவெளியை கடந்து , இந்திய பெருங்கடல் நோக்கி வட கிழக்கு திசையில் அடிப்பவை..
என்ன தான் தென் மேற்கு பருவ காற்று,ஆண்டின் ஒரு கால கட்டத்திலேயும் , வடகிழக்கு பருவகாற்று ஆண்டின் மற்றொரு கால கட்டத்தில் , எதிரெதிர் திசையில் வீசினாலும், பருவ மழை, வழி நெடுகிலும் பெய்ய வேண்டுமெனில், சில விஷயங்கள் கை கொடுக்க வேண்டும். அதாவது , பருவ காற்று வீசும் பாதையில் ஏதேனும் உயர்ந்த சிகரங்கள் இருக்க வேண்டும். மேலும் , அந்த தேசத்தை சுற்றிலும் நீர் நிலைகள் நிறைந்து இருக்க வேண்டும். அதாவது , நம் இந்திய தேசத்தை , வங்காள விரிகுடா , அரபி கடல் , இந்திய பெருங்கடல் ஆகியவை மூன்று பக்கத்திலும் சூழ்ந்து இருப்பது போல..அவ்வாறு , பருவ காற்று வீசும் வழியில் , உயர்ந்த மலைகள் எதுவும் இல்லையெனில், பருவ காற்று வீசும் , ஆனால் மழை எதுவும் பெய்யாது!
தென் மேற்கு பருவ காற்றுக்கு கை கொடுப்பது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களும் , இமாலய மலையும் தான் ! அதே போல வட கிழக்கு பருவ மழைக்கு கை கொடுப்பது , உயர்ந்த கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்களே ஆகும்!இத்தகைய மலைத் தொடர்கள் இல்லையெனில் , இந்திய பெருங்கடலில் இருந்து , தென் மேற்கு திசையில் வீச தொடங்கும் ,தென் மேற்கு பருவ காற்று , எந்த தடுப்பு சுவரும் இல்லை என்பதால் , மழை எதுவும் பொழியாமல் நேரே திபெத் , பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் என்று சுற்றுலா சென்று விடும் !
கடைசியாக , முதல் மழையை அறிவிக்கும் , மண் வாசனையை பற்றி குறிப்பிடாமல் இருக்கு முடியவில்லை.. மண் வாசனை எப்படி கிளம்புகிறது ?? இதை கிளப்புவது , மண்ணில் வாழும் ஒரு வகையான பாக்டீரியா! முதல் மழை பெய்த உடன் , இந்த பாக்டீரியா , எளிதில் ஆவியாகும் ஒரு இரசாயன கலவையை வெளியிடுகிறது .. ஒரு கைப்பிடி மண்ணில் , பத்து லட்சம் பாக்டீரியாக்கள் இருக்கும் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்! இந்த பரவசமூட்டும் மண் வாசனையோடு இந்த பதிவை முடித்து கொள்கிறேன்…
நன்றி…. வணக்கம்!
சூப்பர் அக்கா! அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்! சில நாட்களுக்கு முன்னர் BBC Science இல் நான் பார்த்த முகில்களைப் பற்றிய ஒரு கட்டுரை. விதம் விதமான அழகிய அமைப்போடு இருக்கும் முகில்களைப் பற்றி விளக்குகிறது, உங்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறன். http://www.bbc.com/earth/story/20150716-nine-rare-and-beautiful-clouds
LikeLiked by 1 person
அழகு அழகான முகில்கள்… மிகவும் ரசித்தேன் சரவணா 🙂
LikeLiked by 1 person
🙂
LikeLiked by 1 person
முழுவதும் படித்தேன். பொறுமையுடன் சுவையான பதிவு எழுதியதற்கு நன்றி.
LikeLiked by 1 person
நன்றி பாண்டியன் அண்ணா! இன்னும் மழையை பற்றி சொல்ல நிறையவே இருக்கிறது.. அதையும் ஒரு நாள் பொறுமையுடன் பதிந்து விட ஆசையோடு காத்திருக்கிறேன் 🙂
LikeLiked by 1 person
அற்புதமான விளக்கம்… நன்றி…
LikeLiked by 1 person
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன் சார் 🙂
LikeLike
அருமையான விளக்கம், நன்றிகள் உங்களுக்கு!!
LikeLiked by 1 person
வாங்க சார்! உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙂
LikeLike
Reblogged this on பிரபுவின் and commented:
பல வியத்தகு தகவல்களை உள்ளடக்கிய இந்தப் பதிவை “இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்” வலைப் பதிவிலிருந்து மீள் பிரசுரம் செய்கின்றேன்.இயற்கையை அறிபவனே/அறிபவளே வாழ்க்கையை ரசிக்கின்றான்/ரசிக்கின்றாள்.
நன்றி மஹா அக்கா.
LikeLiked by 1 person
வா பிரபு! இந்த பதிவை மீள் பிரசுரம் செய்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்! ஆம் பிரபு.. நான் மழையை மிகவும் ரசிப்பவள்! உடைந்து போன நெஞ்சத்தை கூட சரி செய்து விடும் ஆற்றல் பெய்யென பெய்யும் மழைக்கு உண்டு! நன்றி 🙂
LikeLiked by 1 person
உயர்திரு. கௌரவ.எ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை இந்தப் பதிவு மூலம் கெளரவிக்கின்றீர்களோ என்று தோன்றுகின்றது.அவரைப் போல இயற்கையை நேசித்தவர் யாரும் இருக்கவே முடியாது.தமிழ் நாட்டில் பிறந்து தமிழர்களை பெருமைப்படுத்தியவர்.
நன்றி மஹா அக்கா.
LikeLiked by 1 person
ஆம் பிரபு! நீ சொல்வது உண்மை தான்! நான் ஆந்திர மாநிலம் குண்டூரில் வசிக்கிறேன்.. இங்கே , ஊரில் திரும்பிய இடமெல்லாம் , Missile Man Dr.அப்துல் கலாம் அவர்களுக்கு , கண்ணீர் அஞ்சலி செலுத்துவதை காணும் போது , தமிழன்டா என்று கதற வேண்டும் என்று என் நெஞ்சம் துடித்தது என்னவோ உண்மை தான்!
LikeLike
கடலிலுள்ள நீர் ஆவியாக மாறி சூரிய வெப்பத்தால் மழையைப் பொழிகிறது என்ற அளவில் தான் மழையைப் பற்றித் தெரியும். உங்கள் பதிவு விலாவாரியாக மழையப் பற்றி பேசுகிறது. அறிவியல் கட்டுரையை சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள், மஹா. இது உங்களது பெரிய ப்ளஸ் பாயின்ட். தொடருங்கள்.
பாராட்டுக்கள்!
LikeLiked by 1 person
வாங்க ரஞ்சனி அம்மா.. தெரியாதவற்றை எல்லாம் தேடி தெரிந்து கொண்டு , அவற்றை தொகுத்து பதிவுகளாக வெளியிடும் போது , மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது! சுவாரசியமாக எழுதுவது எல்லாம் உங்களை பார்த்து கற்று கொண்டது தான் 😉 வருகைக்கும் , கருத்துரைக்கும் மிக்க நன்றி அம்மா 🙂
LikeLiked by 1 person
Mika nalla pathivu sis…
LikeLiked by 1 person
Thanks a lot sis ☺
LikeLike