மின்னணுவியலில் புரட்சியை உண்டாக்கிய டிரான்சிஸ்டர்

transistor4

மேலே படத்தில் மூன்று கால் பூச்சியை போல் காட்சி அளிக்கிறதே.. அது தாங்க நம்ம ஹீரோ டிரான்சிஸ்டர்! இது என்ன?? இது எப்படி உருவாக்கப்படுகிறது?? இது எப்படி வேலை செய்யும்?? இதற்கும் மின்னணுவியலுக்கும் என்ன சம்பந்தம்  என்று விரிவாக , ஒவ்வொன்றாக நோக்குவோம்!

நமது மூளையில் கிட்டத்தட்ட 100 பில்லியன் நியூரான்கள் இருக்கின்றன! அவை தான் நாம் யோசனை  செய்வதற்கு ,நடந்த ஒரு விஷயத்தை  நியாபகப்படுத்தி  பார்ப்பதற்கும் , துணை புரிகின்றது. அதே போல, இந்த டிரான்சிஸ்டர்கள்  கணினியின் மூளை உயிரணுக்கள்!  இந்த டிரான்சிஸ்டர்கள் , மண்ணில் பரவலாக காணப்படும்  சிலிகான்(Silicon) என்ற வேதியியல் தனிமத்தை கொண்டு உருவாக்கப்படுகிறது!

transistor5

படத்தில் காணப்படுவது , ஒரு எளிமையான மின்னணு சுற்று(Simple Electronic circuit) பலகையில் காணப்படும் ஒரு தனி டிரான்சிஸ்டர் . கணினியின் உள்ளே காணப்படும் , சிக்கலான சுற்றுகளில்(Complex Electronic circuits) ,  மைக்ரோசிப்புகளில் காணப்படும்! அந்த மைக்ரோசிப்பின் உள்ளே , ஆயிரம் , மில்லியன் , பில்லியன் கணக்கில்  டிரன்சிஸ்டர்கள் இருக்கும்!

transistor6

டிரான்சிஸ்டர்  என்பது மிக சின்ன அளவிலான ஒரு மின்னணு கூறு(Electronic Component)! இது இரண்டு வகையான வேலைகளை செய்ய கூடியது! அவை ச்விட்சாக(Switch) அல்லது பெருக்கியாக(Amplifier) வேலை செய்ய கூடியது!

டிரான்சிஸ்டர் பெருக்கியாக வேலை செய்யும் போது என்னென்ன நடக்கும் என்று முதலில் பார்க்கலாம் ..ஒரு மிக சிறிய அளவிலான மின்சாரத்தை  , டிரான்சிஸ்டரின் ஒரு முனையில் உள்ளே   கொடுத்தால் , மறுமுனையில் அதிக அளவிலான  மின்சாரத்தை வெளியிடும்! ஆக, இதை வேறு பெயர் சொல்லி அழைக்க விரும்பினால்  , மின்சார உயர்த்தி(Current Amplifier) என்று அழைக்கலாம்!

 

காது கேளாதவருக்கான , கேள்வி சாதனத்தில்(Hearing Aid) , இந்த டிரான்சிஸ்டர்  தான் உபயோகம் செய்யப்படுகிறது! எப்படி உபயோகம் ஆகிறது என்று இப்பொழுது பார்க்கலாம்! கேள்வி சாதனத்தில் , ஒரு மைக்ரோபோன் இருக்கும்! இவ்வுலகில் , நம்மை சுற்றி எழும் ஓசைகளை , இந்த மைக்ரோ போன் , உள்ளீடாக(Input) எடுத்து கொள்கிறது. அவ்வாறு உள்ளீடாக எடுத்து கொள்ளப்பட்ட  வித விதமான ஓசைகளுக்கு தக்க  ஏறி இறங்கும் மின்சாரமாக மாற்றப்படுகிறது. அந்த ஏறி இறங்கும் மின்சாரம் , ஒரு டிரான்சிஸ்டரின்  உள்ளே கொடுக்கப்படுகிறது! அந்த மின்சாரத்தை டிரான்சிஸ்டர்  உயர்த்தி , ஒரு ஒலி  பெருக்கியில்(Sound Amplifier) கொடுக்கிறது! ஆக , காது கேளாதவருக்கு , இந்த கேள்வி சாதனம் மூலமாக , தன்னை சுற்றி எழும் ஓசைகளின் ஒலி பெருக்கப்பட்டு காதில் கேட்கிறது !

transistor6

 

ஒரு டிரான்சிஸ்டரை  ச்விட்சாகவும் உபயோகிக்கலாம்! டிரான்சிஸ்டரின் ஒரு பகுதியில் ஒரு சிறிய அளவிலான மின்சாரத்தை கொடுத்தால், டிரான்சிஸ்டரின் இன்னொரு பகுதியில் அதிக அளவிலான மின்சாரத்தை வெளியிடும்! அதாவது , ஒரு சிறிய அளவிலான மின்சாரம், அதிக அளவு மின்சாரத்தை சுவிட்ச் ஆன் செய்கிறது! இதை கொண்டு தான் எல்லா கணினி சில்லு(Computer chips) களும் வேலை செய்கின்றன! கணினியின் நினைவக சில்லில்(Memory chip) , பில்லியன் எண்ணிக்கையில் டிரான்சிஸ்டர்கள்  இருக்கும்!இந்த டிரான்சிஸ்டர்கள்  ஒவ்வொன்றையும், தனி தனியாக ஆன் , ஆப் செய்து கொள்ளலாம் ! ஆக , ஒவ்வொரு டிரான்சிஸ்டரும் ஆன் , ஆப் என்று இரு வேறு நிலைகளில் இருந்து கொள்ளலாம். இதை கொண்டு தான் , கணினியின் நினைவக  சில்லுகளில் உள்ள ஒவ்வொரு டிரன்சிஸ்டரை ஆன் , ஆப் செய்வதன் மூலம் , 1 அல்லது  0 சேமிக்கப்படுகிறது.

transistor8     transistor7

 

பழைய இயந்திரங்களில் உள்ள சிறப்பு என்னவென்றால் , அவற்றை அக்கு வேறு , ஆணி வேறாக ஆராய்ந்து , அவை எப்படி வேலை செய்கிறது என்பதை சுலபமாக கண்டு பிடித்து விடலாம்! ஆனால் மின்னனுவியலை பொறுத்தவரை , அந்த கதை எல்லாம் நடக்காது! மின்னணுவைக் கொண்டு எப்படி எப்படி மின்சாரத்தை கட்டு படுத்தலாம் என்று உரைப்பதே மின்னணுவியல்! அணுவின் உள்ளே இருக்கும் ஒரு மிக சிறிய துகளே(Particle) மின்னணு(Electron)!அதனுடைய எடையை  கேட்டால் அசந்து விடுவீர்கள் .. 0.000000000000000000000000000001 kg மட்டுமே! உங்கள் விரல் நகத்தின் அளவுடைய ஒரு கணினி சில்லில் , 500 மில்லியன் டிரான்சிஸ்டரில் இருந்து 2 பில்லியன் தனி தனி டிரான்சிஸ்டர்கள் இருக்கும்! அப்புறம் எப்படி , தனி தனியாக ஆராய்ந்து பார்த்து அது எப்படி வேலை செய்கிறது என்பதை அறிய!டிரான்சிஸ்டர் பற்றிய கோட்பாடு  மற்றும் நம் கற்பனை திறன் , இவை இரண்டு மட்டுமே , இனி நமக்கு உதவ போகிறது! இந்த டிரான்சிஸ்டர்களை எதை கொண்டு உருவாகுகிறார்கள் என்று அடுத்து பார்க்கலாம்!

டிரான்சிஸ்டர்கள் , மண்ணில் கிடைக்கும் சிலிகான் என்ற வேதியியல் தனிமத்தை  கொண்டு உருவாக்கப்படுகிறது! இந்த சிலிகான், மின் அணுக்கள் சுலபமாக ஓட கூடிய கடத்தியும்(Conductor) அல்ல, மின் அணுக்களின் ஓட்டத்தை எதிர்க்கும்  மின் கடத்தாப்  பொருளும்(Insulator) அல்ல! இது  அரைகுறையாக மின் அணுக்களை கடத்த கூடிய ஒரு மின் கடத்தி! இந்த சிலிகானில்  வேறு சில வேதியியல் தனிமங்களை  சேர்த்து மாசு ஊட்டும் போது(Doping) , அதனுடைய நடத்தையை வேறு மாதிரி மாற்றி கொள்ள முடியும்!

 

சிலிகானில் , ஆர்சினிக் , பாஸ்பரஸ் அல்லது அண்டிமோனி போன்ற வேதியியல் தனிமங்களை சேர்த்து மாசு ஊட்டும் போது , சிலிகானின் உள்ளே , ஏற்கனவே இருக்கும்  மின் அணுக்களோடு சேர்த்து , கூடுதல் மின் அணுக்கள் உருவாகும்! இவ்வாறு உருவாகும் மின் அணுக்களால் , சிலிகான் சுலபமாக மின்சாரத்தை கடத்தும் கடத்தி போல செயல்படும்!  அதாவது , மின் அணுக்கள் ஆனது , இந்த சிலிகானில் இருந்து , அதன் அருகில் இருக்கும் பொருளுக்கு சுலபமாக கடத்தப்படும் !மின் அணுக்களுக்கு எதிர்மறை சார்ஜ்(negative) இருப்பதால் , இந்த முறையால் மாசு ஊட்டப்பட்ட சிலிக்கானை ‘n’வகை என்று அழைப்பர்!

மாறாக , சிலிகானில் , போரான் , காலியம் , அலுமினியம் போன்ற வேதியியல் தனிமங்களை கொண்டு மாசு ஊட்டும் போது , அதனுள்ளே இருக்கும் சில  மின் அணுக்கள் அகற்றப்படுகின்றன! மின் அணுக்கள் இருந்த இடங்கள் எல்லாம் காலியாக  இருக்கும்! அவற்றை ஓட்டைகள்(Holes)என்றழைப்பர்!  இதனால் , அருகில் உள்ள பொருட்களில் உள்ள மின் அணுக்கள் இதனுள் சுலபமாக கடத்தப்படும் ! ஓட்டைகளுக்கு  நேர்மறை சார்ஜ்(Positive) இருப்பதால் , இந்த முறையால் மாசு ஊட்டப்பட்ட சிலிக்கானை ‘p ‘ வகை என்று அழைப்பர்!

transistor11

 

transistor12

 

இரண்டு வகையான சிலிகான்களை பற்றி அறிந்து கொண்டோம்! ஒன்று ‘p ‘ வகை , மற்றொன்று ‘n ‘ வகை! இந்த இரண்டு வகை சிலிகான்களையும் , ஒரு சாண்ட்விச்சை போல் ஒன்று சேர்க்கும் பொழுது , நிறைய அற்புதமான விஷயங்கள் நடை பெறுகின்றன! அவற்றை பற்றி அடுத்து பார்க்கலாம்!

transistor13

 

ஒரு ‘p ‘ வகை சிலிகானையும் , ‘n ‘ வகை சிலிகானையும் , சான்ட்விச் போல இணைத்து , இரண்டுக்கும் இடையே ஒரு நேர்மறை மின் அழுத்தத்தை கொடுத்தவுடன், மின் அணுக்கள் அதிகமாக இருக்கும் , ‘n ‘ வகையில் இருந்து , மின் அணுக்கள் அகற்றப்பட்ட ‘p ‘ வகைக்கு மின்சாரம்  சுலபமாக பாயும்! ஆனால் , இரண்டுக்கும் இடையே ஒரு எதிர்மறை மின் அழுத்தம் கொடுத்தால் , எந்த மின்னோட்டமும் இருக்காது!ஆக, இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் , இவ்வகை மின்கூறுகளில் , மின்சாரம் ஒரு திசையில் மட்டுமே பாயும்! எதிர் திசையில் மின்சாரத்தை பாய வைப்பது சாத்தியமே இல்லை! இவ்வகை மின் கூறுகளை , இரு முனையம் என்று அழகு தமிழில் அழைப்பர்! ஆங்கிலத்தில் இதன் பெயர் டையோடு(Diode) !

transistor3

இந்த மின் கூறு , ஒரு திசையில் மட்டும் மின்சாரத்தை பாய அனுமதிப்பதால், இதை சீராக்கும் சுற்றாக(Rectifier) ,பயன் படுத்த படுகிறது! சீராக்கும் சுற்று என்றால் என்ன என்று விரிவாக அறிய இன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை பதிவை படிக்கவும்! இந்த சீராக்கும் சுற்று , மாறு திசை மின்னோட்டத்தை(Alternating current) , ஒரு திசை மின்னோட்டமாக(Direct current) மாற்றி கொடுக்கிறது! மேலும் , இந்த டையோடுகளின் வழியாக மின்சாரம் பாயும் போது , விளக்கு எரியும் வண்ணம் வடிவமைக்க படுவதுண்டு! இதை தான் LED(Light  Emitting  Diode ) என்று அழைப்பர்! அழகு தமிழில் சொல்வதென்றால், ஒளி உமிழும் இருமுனையம் என்று சொல்லலாம்!

transistor14       transistor15

 

ஒரு ‘n ‘ வகை , மற்றும் ஒரு ‘p ‘ வகையை , ஒரு சான்ட்விச் போல் இணைக்கும் பொழுது என்னவெல்லாம் விந்தைகள் புரிகின்றன என்று பார்த்தோம்! இப்பொழுது , இரண்டுக்கு பதிலாக ,மூன்று சிலிகான்களை , சான்ட்விச் போல் இணைக்க போகிறோம்! கீழே படத்தில் காண்பித்தது போல , ஒரு ‘n ‘ வகை , ஒரு ‘p ‘ வகை , மறுபடியும் ஒரு ‘n ‘ வகை! இரண்டு ‘n ‘ க்கு நடுவில் ஒரு ‘p ‘வகை சிலிகான் வைக்கப் பட்டிருக்கிறது! இது தாங்க npn டிரான்சிஸ்டர்! இதற்கு மூன்று கால்கள் உண்டு! அதாவது மூன்று மின்சார தொடர்பு கம்பிகள் உண்டு! அவை , உமிழ்ப்பான்(Emitter ), பேஸ் (Base ), சேகரிப்போன்(Collector )!

இரண்டு ‘n ‘ வகை சிலிகானோடும் இணைக்கப்படிருப்பது , உமிழ்ப்பானும்(Emitter) , சேகரிப்போனும்(Collecter)! ‘p ‘ வகையோடு இணைக்கப்பட்டிருப்பது பேஸ் !இரண்டு ‘n ‘ வகை சிலிகானிலும் , கூடுதல் மின் அணுக்கள் இருப்பதை தெரிவிக்கும் விதமாய் , ‘-‘ எதிர்மறை குறி(Negative charge) வரையப்பட்டுள்ளது! ‘p ‘ வகை சிலிகானில் , மின் அணுக்கள் , அகற்றப்பட்டிருப்பதை அறிவிக்கும் விதமாய் , ‘+’ நேர்மறை குறி(Positive charge) வரையப்பட்டுள்ளது!

transistor15

 

டிரான்சிஸ்டர் ஆப் ஆகி இருக்கும் நிலையில் , உமிழ்ப்பானுக்கும்(Emitter)  சேகரிப்போனுக்கு(Collecter) இடையே  மின்னோட்டம் எதுவும் இருக்காது! இடையில் இருக்கும் ‘p ‘ வகை சிலிகான்  ஒரு தடுப்பு சுவர் போல் செயல்படும்! இதை எப்படி ஆன் செய்வது என்று அடுத்து பார்க்கலாம்!

இந்த டிரான்சிஸ்டர்  எப்படி வேலை செய்கிறது என்பது தெளிவாக விளங்க , இந்த மூன்று சிலிகான் சாண்ட்விச்சை சற்றே இரண்டாய் பிரித்து பார்த்து படிக்கலாம்! ஒன்று ‘np ‘ இணைந்த பகுதி! மற்றொன்று ‘pn ‘ இணைந்த பகுதி! இந்த இரண்டு பகுதிகளும்  ஒரு இருமுனையத்தை ஒத்து இருக்கிறது அல்லவா ! ஏற்கனவே , நாம் மேலே பார்த்தோம் , எப்படி இருமுனையம் ஆன் ஆகும் என்று! ஒரு நேர்மறை மின் அழுத்தம் இருக்கும் வரை மட்டுமே , இந்த இருமுனையத்தின் வழியாக , மின்சாரம் பாயும்! இவ்வாறு மின்னோட்டத்தை , ஒரு இரு முனையம் ஆதரிப்பதை Forward Bias  என்று அழைப்பர்! ஆனால் எதிர்மறை மின் அழுத்தம் , இரு முனையத்துக்கு , கொடுக்க பட்டதே ஆனால் , இருமுனையம் , அதன் வழியே மின்சாரம் பாயாமல் தடுத்து விடும்!இவ்வாறு இரு முனையம் மின்சார ஓட்டத்தை தடை செய்வதை Reverse Bias  என்று அழைப்பர்!

transister19

transistor10

Forward Bias

transistor9

Reverse Bias

 

 

டிரான்சிஸ் டரின்  ‘np’ பகுதி Forward bias  செய்யபடுகிறது! அதாவது , பேஸ்ஸுக்கும்(Base) உமிழ்ப்பானுக்கும்(Emitter) இடையே படத்தில் காண்பித்தது போல் ஒரு நேர்மறை மின் அழுத்தம்(Positive Voltage) கொடுக்கப்படுகிறது! அவ்வாறு  ஒரு நேர்மறை மின் அழுத்தம் கொடுத்தவுடன் , உமிழ்ப்பான்(Emitter)  இணைக்கப்பட்டிருக்கும் ‘n ‘ வகை சிலிகானில் உள்ள மின் அணுக்கள் , பேஸ் இணைக்கப்பட்டிருக்கும் , ‘p ‘ வகை சிலிகானுக்கு இழுக்கப்படும்!

அடுத்ததாக, டிரான்சிஸ்டரின் ‘pn’ பகுதி Reverse Bias  செய்யபடுகிறது! அதாவது  பேஸ்ஸுக்கும்(Base) , சேகரிப்போனுக்கும்(Collecter) இடையே ஒரு எதிர்மறை மின் அழுத்தம்(Negative voltage) கொடுக்கப்படுகிறது! அதனால், ‘np ‘ பகுதியில் Forward Bias இன் போது , ‘n ‘ வகை சிலிகானில் இருந்து , ‘p ‘ வகை சிலிகானுக்கு இழுக்கப்பட்ட மின் அணுக்கள் , மெல்லிய  ‘p ‘ பகுதியில் உள்ள , கொஞ்ச ஓட்டைகளில்(Holes) , நிரம்பியது போக, மீதி மின் அணுக்கள் , ‘pn ‘ பகுதி Reverse  Bias  செய்து விட்ட படியால் , சேகரிப்போன்(Collecter) பக்கம் இழுத்து கொள்ளப்படும் ! இது தான் டிரான்சிஸ்டர் ஆன் ஆகிய நிலை!ஆக , ஒரு இருமுனையம் வாயிலாக , டிரான்சிஸ்டர்  எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தாயிற்று!

சரி , இப்பொழுது , இருமுனையத்தை சற்றே மறந்து விட்டு ஒரு முறை , npn டிரான்சிஸ்டர் எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்த்து விடலாம்..

transistor16                      transistor17

 

 

பேஸ்ஸுக்கும் , எமிட்டாருக்கும் இடையே இருக்கும் மின் அழுத்தமும் , கலெக்டாருக்கும் , எமிட்டார்ருக்கும் இடையே இருக்கும் மின் அழுத்தமும் , பூஜ்யம் ஆக இருக்கும் வரை , டிரான்சிஸ்டர்  ஆப் நிலையில் இருக்கும்! இப்பொழுது , கலெக்டாருக்கும் , எமிட்டாருக்கும் இடையே ஒரு, மின்கலம் மூலமாக , ஒரு  நேர்மறை மின் அழுத்தம் கொடுத்து பாருங்கள்! ஒரு மின் அழுத்தம் இருந்த போதிலும் , எமிட்டாரில் இருந்து கலெட்டாருக்கு எந்த மின்னோட்டமும் இருக்காது! ஏன் என்றால் ,எமிட்டாரில் இருந்து கலெக்டாருக்கு, மின் அணுக்களை  ஓட விடாது தடுக்கும் தடுப்பு சுவர் போல் பேஸ் ஆனது இருக்கும்! இந்த டிரான்சிஸ்டரை  வேலை புரிய வைக்க , இன்னொரு  மின்கலம்  மூலமாக ,  ஒரு சிறிய அளவிலான , நேர்மறை மின் அழுத்தத்தை , பேஸ்ஸுக்கும் , எமிட்டாருக்கும் இடையே கொடுக்க வேண்டும்! அவ்வாறு ஒரு நேர்மறை மின் அழுத்தம் கொடுத்தவுடன் , அதாவது ஒரு 0.6V உக்கும் சற்றே  அதிகமாக கொடுத்தவுடன் , எமிட்டாரில் உள்ள மின் அணுக்கள் , ‘n ‘ வகை சிலிக்கானில் இருந்து , கிளம்பி , நடுவில் இருக்கும் மெல்லிய  ‘p ‘ வகை சிலிக்கானில் இருக்கும் ,குறைந்த அளவு  ஓட்டைகளை , நிரம்பியது போக , எஞ்சிய மின் அணுக்கள் , கலெக்டாரினால் சேகரிக்கப்படுகின்றன! கலெக்டார் , ‘n ‘ வகை சிலிக்கான் என்பதால் , அதில் , ஏற்கனவே , அதிக அளவு மின் அணுக்கள் இருக்கும் என்பதை மறந்து விடக் கூடாது! ஆக , கலெக்டாரில் , ஏற்கனவே இருக்கும் மின் அணுக்கள் போக , இப்பொழுது , சேகரித்த மின் அணுக்களும் சேர்ந்து கொண்டு விட்டது ! கலெக்டாருக்கும், எமிட்டாருக்கும் இடையே ஒரு நேர்மறை மின் அழுத்தம் இருப்பதால் , கலெக்டாரிலிருந்து  எமிட்டாருக்கு அதிக அளவு மின்சாரம் பாயும்!

இப்போ , உங்களுக்கு புரிந்து இருக்கும் , ஏன் டிரான்சிஸ்டரை பெருக்கி(Amplifier) என்று அழைக்கிறார்கள் என்று ! மேலும் , பேஸ் ஸுக்கும் , எமிட்டாருக்கும் இடையே கொடுக்கப்படும் , 0.6V உக்கும் சற்றே அதிகமான மின் அழுத்தத்தை , பூஜ்யம் ஆக்கி விட்டால் , உடனே டிரான்சிஸ்டர் ஆப் ஆகி விடும் !

மேலும் , பேஸ்ஸுக்கும் , ஒரு சிறிய அளவு மின்சாரம் கொடுத்தால் மட்டுமே, டிரான்சிஸ்டர்  ஆன் ஆகும்! இல்லையேல் . , டிரான்சிஸ்டர்  ஆன் ஆவதற்கு வாய்ப்பே கிடையாது! ஆக , இது ஒரு சுவிட்ச் போலவும் செயல்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை!

அடுத்து pnp டிரான்சிஸ்டர்  எப்படி வேலை செய்கிறது என்றும் பார்த்து விடலாம்! pnp டிரான்சிஸ்டரும் , npn  டிரான்சிஸ்டர் போலவே தான் வேலை செய்யும்.. சில சின்ன மாறுதல்களோடு!

transistor

 

இந்த வகை டிரான்சிஸ்டரில் , மின்சாரம் , எமிட்டாரில் இருந்து கலெக்டாருக்கு பாயும்!இதிலே முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால் , அவ்வாறு எமிட்டாரில் இருந்து கலெக்டாருக்கு , மின்சாரம் எப்பொழுது பாயும் என்றால் , பேஸில் ஒரு சிறிதளவு மின்சாரம் கூட பாயாத போது தான்! பேஸில் , சிறிதளவு மின்சாரம் பாய்ந்தால் கூட, pnp  டிரான்சிஸ்டர் , ஆப் ஆகிவிடும்!

 

PNP-transistor-biasing

ஒரு npn  டிரான்சிஸ்டரை  ஆன் செய்ய வேண்டும் என்றால் , பேஸ்ஸில் (Base ) ஒரு சிறிய அளவிலான மின்சாரத்தை கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும்! ஆனால் , ஒரு pnp  டிரான்சிஸ்டரில் , பேஸ்ஸுக்கு  எந்த விதமான மின்சாரமும் கொடுக்காமல் இருக்கும் வரை மட்டுமே , அது  ஆன் ஆகும்!

ஒரு npn டிரான்சிஸ்டரில் , கலெக்டாருக்கு , ஒரு நேர்மறை மின் அழுத்தம் கொடுக்கப்படுகிறது! ஆதலால் , மின்சாரம் , கலெக்டாரில்  இருந்து , எமிட்டாருக்கு பாய்கிறது!ஆனால், ஒரு pnp டிரான்சிஸ்டரில் , எமிட்டாருக்கு , நேர்மறை மின் அழுத்தம் கொடுக்கப்படுவதால் , மின்சாரம் , எமிட்டாரில் இருந்து காலெக்டாருக்கு  பாய்கிறது!

இனி அடுத்து வரும் மின்னணுவியல் பதிவுகளில் , இந்த டிரான்சிஸ்டர்களை கொண்டு எப்படி எப்படியெல்லாம் , மின்னணுவியலில் விந்தைகள் படைத்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்!!!

 

 

 

This entry was posted in மின்னணுவியல், மின்னியல் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

17 Responses to மின்னணுவியலில் புரட்சியை உண்டாக்கிய டிரான்சிஸ்டர்

  1. Pandian சொல்கிறார்:

    வெகு சிறப்பான பதிவு. டிரான்சிஸ்டர் இன்றைய கையடக்கக் கருவிகளுக்கான ஆரம்பம். மொந்தையாக இருந்த கருவிகளைச் சிறிசாக்க ஆக்கிய புரட்சிப் புயல். சகோதரியார் சிறு குழந்தைகளுக்கான ஹாபி சர்க்யூட்டுகள் பற்றி எழுதினால் வெகு சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    Liked by 1 person

    • mahalakshmivijayan சொல்கிறார்:

      வாங்க பாண்டியன் அண்ணா… ஆம் அண்ணா ,கொஞ்சம் நிதானமாய் யோசித்து பார்த்தால் , டிரான்சிஸ்டர் கண்டு பிடித்த பின்னே , எத்துணை அற்புதமான மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன! மனிதனின் மூளையை மெச்சாமல் இருக்க முடியவில்லை! நீங்கள் சொல்வது போல் , குழந்தைகளுக்கு ஆர்வமூட்டும் வண்ணம் , குட்டி குட்டி மின்னணு சுற்றுகள் பற்றி கண்டிப்பாக பதிவு எழுதுகிறேன்! இது நிஜமாவே சூப்பர் ஐடியா தான் அண்ணா 🙂 மிக்க நன்றி 🙂

      Liked by 2 people

  2. ஒவ்வொரு விளக்கமும் மிகவும் தெளிவான விளக்கம்… நன்றி…

    Liked by 1 person

  3. mururavi சொல்கிறார்:

    அருமை மகா … சமீபத்தில் history சேனலில் ஒரு நிகழ்ச்சியில் உலகை மாற்றிய கண்டுபிடிப்புகளில் டிரான்ஸிஸ்டர் ஏழாவது இடத்தில் இருந்தது. Very nice

    Liked by 1 person

    • mahalakshmivijayan சொல்கிறார்:

      ஆம் முருகேஸ்வரி அக்கா! நான் இந்த பதிவை எழுதும் போது , சற்றே மெய்சிலிர்த்து தான் போனேன்! உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் மிக்க நன்றி அக்கா 🙂

      Liked by 1 person

  4. பிரபுவின் சொல்கிறார்:

    “0.000000000000000000000000000001 kg மட்டுமே! ”

    தலை சுற்றுகிறது.உண்மையில் விஞ்ஞானிகள் பாராட்டப்பட்ட வேண்டியவர்கள்.மிக மிக மிகச் சிக்கலான விடயத்தை வேறு யாரால் இவ்வாறு கையாள முடியும்.

    நன்றி மஹா மேடம்.

    Liked by 1 person

    • mahalakshmivijayan சொல்கிறார்:

      ஆம் பிரபு ! மிகுந்த ஆச்சரியத்தை தான் கொடுக்கிறது! இதையெல்லாம் எப்படி வடிவமைத்தார்கள் என்று கற்பனை கூட என்னால் பண்ண முடியவில்லை! உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் மிக்க நன்றி 🙂

      Liked by 1 person

  5. வணக்கம்
    ஒவ்வொரு கண்டு பிடிப்புகளும் வியக்கவைக்கிறது…. விளக்கம் நன்று.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    Liked by 1 person

    • mahalakshmivijayan சொல்கிறார்:

      வாங்க ரூபன் சகோதரா… அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றுமே வியப்பை அளிப்பவை! அதில் ஒன்று தான் இந்த டிரான்சிஸ்டர்… உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் மிக்க நன்றி 🙂

      Liked by 1 person

  6. Sri Saravana சொல்கிறார்:

    சூப்பர் அருமையான விளக்கம் அக்கா, மிகத் தெளிவாக விளக்கிவிட்டீர்கள்!
    நல கடந்து வாசித்ததற்கு மன்னிக்கவும்! ஹிஹி வேலை, பிறகு மறந்துவிட்டேன்!

    கணணி CPU களைப் பொறுத்தவரையில், மிகச் சிறிய இடத்தில் அதிகளவான டிரான்சிஸ்டர்களை அமைக்கவேண்டி இருப்பதால், பத்திக்வேலைப்பாடு போல, ஒரு அச்சை உருவாக்கி, UV கதிர்களைக்கொண்டு இந்த அச்சுக்களை CPUவில் பதிக்கின்றனர். இண்டேல்லின் அதி சக்திவாய்ந்த ப்ரோசசரான xeon CPUவில் 5.5 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உண்டு! இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது நாம் மூர்ஸ் விதியின் எல்லையை தொட்டுக்கொண்டிருகிறோம்.

    இன்னொரு தகவல், diode – இருமுனையம். இங்கே இருவாயி என்று அழைக்கப்படுகிறது. LED – ஒளிகாழும் இருவாயி

    Liked by 1 person

    • mahalakshmivijayan சொல்கிறார்:

      உன் பின்னூட்டம் கண்டு மிக மகிழ்ந்தேன் சரவணா! பத்திக் வேலைப்பாடு என்றால் என்ன??? எப்படி பில்லியன் கணக்கில் டிரான்சிஸ்டர்களை சின்ன இடத்தினுள் நிரப்புகிறார்கள் என்பதனை அறிந்து கொள்ள ஆர்வமாக தான் இருக்கிறது! எப்போதேனும் இதை பற்றி , உனக்கு தெரிந்தவற்றை ஒரு பதிவாக வெளியிடு சரவணா! இருவாயி பெயர் சூப்பர் 🙂

      Liked by 1 person

  7. Siva சொல்கிறார்:

    information is very clear and can be easily understood by all. Great work….

    Liked by 1 person

  8. sherif சொல்கிறார்:

    வணக்கம் ,அக்கா , photocell sensor, light barrier, light curtain sensor என்று சொல்லுகிறார்களே அது பற்றி தயவு செய்து விளக்குங்களேன்.

    Liked by 1 person

பின்னூட்டமொன்றை இடுக