லோ வோல்டேஜ் என்றால் என்ன என்று யாரையாவது கேளுங்கள், கண்டிப்பாக சொல்லுவாங்க… ஓ! தெரியுமே! கரண்ட் இருக்கும் ஆனால் பல்பு மங்கலாக எரியும்.. மின் விசிறி சுற்றும் ஆனால் ரொம்ப மெதுவாக! அவங்க சொல்லுவது எல்லாம் மிக சரி ! இப்போ திரும்ப அவர்களிடமே கேளுங்க.. வோல்டேஜ் என்றால் என்ன?? கரண்ட் என்றால் என்ன ?? சுவிட்சு போட்டால் விளக்கு எரியும்.. மின்விசிறி சுற்றும்.. மிக்சி ஓடும்.. டிவி தெரியும்… இப்படி ஏதாவது சொல்லி சமாளிக்க தெரிந்தவர்கள் நம் மக்கள்!
இந்த லோ வோல்டேஜை பற்றி தெரிந்து கொள்ளும் முன்னர் நாம் அறிய வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது. கரண்ட் இந்த வார்த்தையை தமிழில் மின்சாரம் என்று அழகாய் குறிப்பிடுவர். வோல்டேஜை மின் அழுத்தம் என்று குறிப்பிடுவர். இந்த மின்சாரமும் மின் அழுத்தமும் ஒன்றுகொன்று பின்னி பிணைந்தவை.. அதாவது அது இல்லாமல் இது இல்லை..அது போல , இது இல்லாமல் அது இல்லை! இந்த மின்சாரமானது கடத்தி(conductor ) வழியாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்படி கடத்தி செல்ல ஒரு சக்தி தேவை படும் இல்லையா.. அந்த சக்தி தான் வோல்டேஜ் என்று சொல்லப்படும் மின் அழுத்தம் .
இன்னும் அழகாக புரிந்து கொள்ள சற்றே கற்பனை குதிரையை தட்டி விடுவோம். ஒரு வீட்டு மொட்டை மாடியில் கட்டப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டியையும் , அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் பைப்பையும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த பைப் ஆனது மேலே அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டியை வீட்டினுள்ளே அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தண்ணீர் குழாயுடனும் இணைந்திருக்கும். இந்த தண்ணீர் தொட்டி முழுதும் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கும். சரி.. எதற்காக மொட்டை மாடியில் போய் தண்ணீர் தொட்டியை கட்டுவானேன்?? அப்படி கட்டினால் தான் அதில் நிரப்பபட்டிருக்கும் தண்ணீருக்கு , கீழே குழாயை திறந்தவுடன் பைப் வழியாக ஓடி வர வசதியாக இருக்கும்.அதாவது சற்றே ஏற்றத்திலிருந்து இறக்கத்திற்கு. அப்படி பைப் வழியே கீழே வீட்டுக்குள் ஓடும் தண்ணீரை மேலே தண்ணீர் தொட்டியில் இருக்கும் தண்ணீர் அழுத்தும். அதனால் ஒரு வகை அழுத்தம்(பிரஷர்) உண்டாகும். இந்த அழுத்தம் இருப்பதனால் தான் குழாய் திறந்தவுடன் தண்ணீர் பிய்த்து கொண்டு வருகிறது. குழாயை அடைத்தவுடன் தண்ணீர் வருவது நின்று விடுகிறது . இப்போ கற்பனை உலகத்திலிருந்து இருந்து நிஜ உலகத்திற்கு வந்து விடுவோம். இதில் ஓடி வரும் தண்ணீர் தான் மின்சாரம், பைப் தான் கடத்தி , ஒரு வகை அழுத்தம் பைப்பினுள்ளே உண்டானதே, அதே வகை அழுத்தம் தான் மின் அழுத்தமும்!
இப்போ கொஞ்சம் தொழில் நுட்ப ரீதியாக பார்க்கலாம். ஒவ்வொரு பொருளும் அணுக்களால்(Atom) ஆனவை . ஒவ்வொரு அணுக்களிலும் ப்ரோடான், நியூட்ரான் , எலெக்ட்ரான்கள் உண்டு . கடத்திகளில் இருக்கும் அணுக்களில் சில எலெக்ட்ரான்களால் ஒரு அணுவில் இருந்து இன்னொரு அணுவுக்கு தாவி செல்ல முடியும்.. ஆக ஒரு மின்சுற்றில்(Electric circuit ), எலக்ட்ரான்களின் ஒழுங்கமைக்கப்பட்ட ஓட்டமே மின்சாரம். இவ்வாறு எலெக்ட்ரான்கள் ஓடுவதற்கு வேண்டிய சக்தியை தருவதே மின் அழுத்தம்!
மேலே காணப்படும் மின்சுற்றை பாருங்கள்! ஒரு மின்கலம் கடத்தி மூலமாக ஒரு பல்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது . இப்பொழுது அந்த மின்கலத்தை இரண்டாம் படத்தில் எப்படி வரைந்து இருக்கிறார்கள் என்று நோக்குங்கள்.. ஒரு நீள தகடு மற்றும் ஒரு நீளம் குறைந்த தகடு சிறிது இடைவெளியில் எதிர் எதிராக இருப்பது போல் காணப்படுகிறது. நீளத்தகடை பாசிடிவ் சார்ஜ் ப்ளேட் என்று அழைப்பர். அதிலே எலெக்ட்ரானின் எண்ணிக்கை கம்மியாக இருக்கும். சிறிது நீளம் குறைந்த தகடை நெகடிவ் சார்ஜ் ப்ளேட் என்று அழைப்பர். எலெக்ட்ரானின் எண்ணிக்கை அளவில் அதிகமாய் காணப்படும்.
இப்பொழுது 1.5வோல்ட் (1.5 volt A A Size battery )மின்கலத்தை பல்புடன் கடத்தி மூலமாக இணைத்தவுடன், மின்கலத்தில் ஏற்படும் இரசாயன எதிர்வினையால் சக்தி கிடைத்து , அவை எலெக்ட்ரான்களை பிடித்து தள்ள , மின்கலத்தில் எலெக்ட்ரான் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் தகடையிலிருந்து, எலெக்ட்ரான் அளவில் கம்மியாக இருக்கும் தகடுக்கு விரைந்து ஓடும். அதாவது ஏற்றத்தில் இருந்து இறக்கத்திற்கு.. இந்த தருணத்தில் மேலே சொன்ன தண்ணீர் தொட்டி கதையை ஒப்பிட்டு பார்ப்பது நன்கு புரிந்து கொள்ள உதவும். அவ்வாறு கடத்தி மூலம் விரைந்து ஓடும் போது பல்பு பிரகாசித்து எரியும். நாளாக ஆக மின்கலம் பழையதாகி விடும் போது , எலெக்ட்ரான்களை பிடித்து தள்ளும் சக்தி குறைந்து விடும். அத்தகைய தருணங்களில் பல்பு மிகவும் மங்கலாக எரியும்!!
மின் அழுத்தம் என்றால் என்ன? மின்சாரம் என்றால் என்ன? கடத்தி என்றால் என்ன?? இவற்றுக்கு எல்லாம் ஓரளவு பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்! இனி குறைந்த மின் அழுத்தம் என்றால் என்னவென்று கண்டிப்பாக பார்த்து விடுவோம். மின்சாரத்துறையால் நம் இல்லங்களுக்கு கொடுக்கப்படும் மின்சாரத்தின் மின் அழுத்தத்தின் அளவு 230வோல்ட் . சில சமயங்களில் மின்சாரத்துறை உற்பத்தி செய்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் மின்சக்தி, தேவைக்கும் குறைவாக வழங்கப்படும் போது இது போன்ற குறைந்த மின் அழுத்த நிலை உண்டாகிறது! இது போன்ற தருணங்களில் நம் வீடுகளில் உள்ள மின் உபகரணங்களின் நிலை என்னவாகும் என்று அடுத்து பார்க்கலாம்.
நம் வீட்டில் உள்ள மின் உபகரணங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, மின்சக்தியை வெப்ப சக்தியாக மாற்றும் மின்சார சலவை பெட்டி (ஐயன் பாக்ஸ்) , குண்டு பல்பு , மின்சார சுடுவான்(எலெக்ட்ரிக் டோஸ்ட்டர்), ஹீட்டர் , தூண்டல் அடுப்பு (Induction Stove )போன்றவை… இது போன்ற குறைந்த மின் அழுத்தம் வரும் போது இவற்றுக்கு
அவ்வளவு பாதிப்பு வராது. ஏன் என்றால் மின் அழுத்தம் குறைவாக இருப்பதால் , இந்த மின் உபகரணங்களும் குறைந்த அளவு மின்சாரத்தையே எடுக்கும்.. அதனால் அவை செய்யும் வேலை ஒழுங்காக நடை பெறவில்லை என்றாலும் பெரியதாய் ஆபத்து எதுவும் ஏற்படாது!!
அடுத்து வகையான மின் உபகரணங்களை பார்க்கலாம். அவை மின் சக்தியை இயக்கவாற்றலாக(Mechanical Energy ) மாற்றுபவை.. நாம் தண்ணீரை இரைக்க பயன்படுத்தும் மோட்டார், மின் விசிறி , தொலைகாட்சி பெட்டி , குளிர்சாதன பெட்டி , ஏசி போன்றவை இது போன்ற குறைந்த மின் அழுத்த காலங்களில் மின்சாரத்தை அதிகப்படியாக எடுத்து கொள்கின்றன.. அதன் விளைவால் அம்மின் உபகரணங்களின் உள் பாகங்கள் வெப்பமடைந்து அதிக சேதத்துக்கு உள்ளாகி நமக்கு பெரும் பொருட் செலவை உண்டு செய்து விடுகின்றன… மின் அழுத்த நிலைப்படுத்தி (Votage Stabilizer ) அம்மின்உபகரணங்களுக்கு உபயோக படுத்தினால் பிரச்சனை இல்லை.. இல்லையேல் குறைந்த மின் அழுத்த நேரங்களில் அவற்றை உபயோகப்படுத்தாமல் சுவிட்ச்சை அணைத்து வைத்து விடுவது நல்லது!!
நல்ல இலகுவில் விளங்கிக்கொள்ளத்தக்க பதிவு. நன்றி அக்கா 🙂
LikeLiked by 1 person
உடனடி கருத்துரைக்கு மிக்க நன்றி சரவணா 🙂
LikeLiked by 1 person
அட்டகாசமான விளக்கம்… நன்றி…
LikeLiked by 1 person
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன் சார் 🙂
LikeLike
அருமையான பதிப்பு ! அற்புதம்!!
LikeLike
நன்றி அவினாஷ் சார்! உங்களுடைய வருகை நிஜமாகவே எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்திருக்கிறது.. 🙂
LikeLiked by 1 person
சிறப்பு. எளிய முறையில் விளக்கம்..
LikeLiked by 1 person
Thank you sir 🙂
LikeLike