காய்ச்சல் நல்லதா?? யாரு சொன்னா என்று நீங்கள் பதறுவது புரிகிறது… காய்ச்சல் வந்தால் உடம்பு நெருப்பா கொதிக்கும், வாய் கசக்கும், தூக்கமில்லாமல் போகும் , பசி இருக்காது .. புரிஞ்சா சரி தான் என்று நீங்கள் சொல்வது காதில் விழாமல் இல்லை! சரி.. அது என்ன காய்ச்சல்? அது ஏன் வருகிறது? இதை முதலில் புரிந்து கொண்டால் எல்லாவற்றுக்கும் விடை கிடைத்து விடும்!
நம் உடம்பில் சாதாரணமாக காணப்படும் வெப்ப நிலை 98 டிகிரி பாரன்ஹீட் . இந்த அளவு வெப்பம் நம் உடம்பில் எவ்வாறு உண்டாகிறது என்று முதலில் பார்க்கலாம். இந்த அளவு வெப்பம் நம் உடம்பில் உருவாக, தசை உடற்பயிற்சி ,உணவு ஜீரணம் மற்றும் உடம்பின் மற்ற முக்கிய செயல்முறைகள் ஆகியவை காரணமாகின்றன . சுற்று சூழல் வெப்பநிலை ஒரே சீராக இல்லாது ஏறி இறங்கி காணப்பட்டாலும் நம் உடம்பின் வெப்பநிலை ஒரே சீராக 98 டிகிரி பாரன்ஹீட் தொடர்ந்து செயலாக்கபடுவது எவ்வாறு என்று அடுத்து பார்க்கலாம்.
நம் உடம்பின் வெப்பத்தை சீராக்குவதற்கு என்றே நம் மூளையின் மையத்தில் ஹைப்போதலாமஸ் என்று ஒன்று உண்டு. இந்த ஹைப்போதலாமஸ் ஆனது நம் உடம்பில் உள்ள நரம்பு மண்டலத்தையும் , பிட்யூட்டரி சுரப்பியையும் ஒருங்கிணைக்கிறது.
சுற்று சூழல் வெப்பம் அடையும் போது , நம் இரத்தம் சூடாகிறது. உடனே ஹைப்போதலாமஸ் ஆனது பிட்யூட்டரி சுரப்பிக்கும், நரம்பு அமைப்புக்கும் செய்தி அனுப்புகிறது . உடனே இரத்த நாளங்கள் விரிவடைந்து ,ஆயிரத்துக்கும் அதிகமான வியர்வை சுரப்பிகளை திறக்க வைக்கிறது. இந்த சுரப்பிகளின் வழியாய் சுரக்கும் வியர்வையானது நம் உடலை குளிர்வித்து விடுகிறது. அதிகப்படியான வெப்பம் குறைந்து 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு உடல் வெப்பம் வந்து விடுகிறது.
சுற்று சூழல் தட்பவெப்பநிலை குளிர்ச்சி அடையும் போது , நம் இரத்தமும் குளிர்ந்து விடுகிறது. இந்த நிலையில் ஹைப்போதலாமஸ் ஆனது அட்ரீனல் சுரப்பியையும். பிட்யூட்டரி சுரப்பியையும் தூண்டி விடுகிறது. உடனே கல்லீரல் ஆனது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கூட்டி விடுகிறது. இந்த சர்க்கரை ஆனது நம் உடம்பின் முக்கியமான அடுப்புகளாக செயல்படும் தசைகளில் எரிபொருள் போல் செயல்படுகிறது. உடனே நம் உடம்பு நடுநடுங்க ஆரம்பிகிறது. அந்த நடுக்கங்களின் விளைவாய் உடம்பில் வெப்பம் உருவாகிறது. அந்த வெப்பத்தை தக்க வைத்து கொள்ள நாம் குளிர் கால உடைகள் அணிந்து கொள்வது நலம் பயக்கும்.
இவ்வாறு ஹைப்போதலாமஸ் ஆனது நம் சுற்று சூழல் வெப்பநிலை ஏற்றமும் இறக்கமும் ஆக இருந்தாலும் நம் உடம்பின் வெப்ப நிலையை சமச்சீராக வைக்க உதவுகிறது. இந்த வெப்பநிலை சீராக்கத்தில் குழப்பம் ஏற்படும் போது காய்ச்சல் உண்டாகிறது !
ஒரு வழியாக காய்ச்சல் என்றால் என்ன என்று அறிந்து விட்டோம். இனி காய்ச்சல் வரும் போது நம் உடம்பின் வெப்ப நிலை எவ்வாறு கூடி விடுகிறது என்று பார்க்கலாம். அவ்வாறு வெப்ப நிலை கூடும் போது நம் உடம்பில் எத்தகைய நல்ல விஷயங்கள் நடக்கின்றன என பார்க்கலாம்!
வெளியில் இருந்து நம் உடம்பின்னுள்ளே வைரஸ் , பாக்டீரியா போன்ற கிருமிகள் அத்துமீறி நுழைந்து விடும் போது, நம் உடம்பின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதனை எதிர்க்கும் விதமாய் வெள்ளை இரத்த அணுக்களை தூண்டி விடுகிறது . இவ்வாறு தூண்டப்பட்ட வெள்ளை இரத்த அணுக்கள் சைட்டோகீன்ஸ் என்ற பொதுவான பெயரில் அழைக்கப்படும் பல்வேறு புரதங்களை வெளியிடுகிறது!
இந்த புரதங்கள் மூளைக்கு சமிக்ஞை அனுப்பி பல்வேறு இரசாயனங்களை உற்பத்தி செய்கிறது. இந்த இரசாயனங்கள் நம் மூளையில் இருக்கும் ஹைப்போதலாமஸ் உடன் கடுமையாக வினை புரிய , உடனே ஹைப்போதலாமஸ் ஆனது யாரங்கே… உடனே வெப்பத்தை அதிகரியுங்கள் என்று நம் மொத்த உடம்புக்கும் சமிக்ஞை அனுப்புகிறது.
இந்த மாதிரி உடல் வெப்பம் அதிகரிக்கும் போது என்னென்ன நன்மைகள் நடக்கும் என்று பார்க்கலாம். அதீத வெப்பத்தில் பாக்டீரியா கிருமிகள் பல்கி பெருகுவது சாத்தியமில்லாது போகும். ஏனெனில் இத்தருணங்களில் உடம்பின் இரும்புசத்து அளவு குறைந்து போகும். பாக்டீரியா கிருமிகள் பல்கி பெருக அவற்றுக்குஉடம்பின் இரும்புசத்து அளவு குறையாமல் இருப்பது `மிக அவசியம். அதனால் காய்ச்சல் என்பது மிக நல்லதே! சரி காய்ச்சலின் போது நாம் அனுபவிக்கும் உடல் சோர்வு , தூக்கமின்மை , கை கால் வலி , பசியின்மை இது கூட நல்லதா என்று கேட்டால் அதுவும் நல்லதே! இதில் பிரமிக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் காய்ச்சலின் போது இத்தனை கஷ்டங்களையும் ஏற்படுத்துவது நோய் கிருமிகள் அல்ல.. நான் மேலே குறிப்பிட்டு இருந்தேனே அந்த சைட்டோகீன்ஸ் தான்! எல்லாம் நம் உடம்பு படுத்தும் பாடு தான். அப்படியாவது நாம் நோய் தொற்று சரியாகும் வரை சிறிது ஓய்வு எடுத்து கொள்வோம் என்ற நம்பிக்கையில்! வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்பதை காய்ச்சல் உணர்த்திவிட்டது!
ஆக, எல்லாத்துக்கும் காரணம் ஹைப்போதலாமஸ் தானா!! ஓகே ஓகே, அதேபோல, ஒரு உபரித்தகவல் – இந்த பச்சை குத்திக்கொள்பவர்கள், கொஞ்ச நாளிலேயே அந்த சற்று மங்கும், ஓரளவுதான், அதற்கு மேல் மங்காது.. அது ஏன் என்றால், நமது உடலமைப்பின் விசித்திரம் புரியும், இந்த பச்சை ink தசைகளுக்கு உள் செலுத்தப்படுகிறது, இந்த inkஐ கண்ட நம், வெண்குருதிச்சிறுதுணிக்கைகள் (வெள்ளை இரத்த அணுக்கள் உங்கள் மொழியில் ஹிஹி) அவற்றை அட்டாக் செய்து விடும், இதில், வெண்குருதிச்சிறுதுணிக்கையை விட சிறிய ink துளிகளை இவை அழித்துவிடுவதால், இந்த பச்சை கொஞ்சம் மங்குகிறது. ஆனால், வாழ்க்கைக்காலம் பூராக, இந்த inkகை நான் அழித்தே தீருவேன் எண்டு வெண்குருதிச்சிறுதுணிக்கைகள் கங்கணம் கட்டிக்கொண்டு போராடுவது நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஹிஹி….
– சரவணா
LikeLiked by 1 person
என்னடா இவன் எல்லாத்துக்கும் உபரித்தகவல் சொல்லுறானே எண்டு தப்பாக நினைகதேங்கோ! 😀
LikeLiked by 1 person
சூப்பர் சரவணா! நல்ல அருமையான தகவல்கள்! புதியதாய் தகவல்கள் தெரிந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி தான்.. நன்றி 🙂
LikeLiked by 1 person
இனிமே காய்ச்சல் வந்தால் ‘எங்க மஹா சொல்லிட்டாங்க…காய்ச்சல் நல்லதுன்னு’ அப்படீன்னு சொல்லிடறேன்.
மிக எளிமையாக, விவரமாக விளக்குகிறீர்கள் மஹா! ஏதாவது பள்ளிக்கூடத்தில் அறிவியல் ஆசிரியராக வேலை கிடைக்குமா பாருங்களேன். இது தமாஷ் இல்லை. உண்மையிலேயே சொல்லுகிறேன். மிகத் தெளிவான விளக்கம்.
பாராட்டுக்கள்!
LikeLike
வாங்க ரஞ்சனி அம்மா! உங்களுக்கு தான் தெரியுமே நானும் நான் படித்த விதமும் 😉 புரிந்து படிக்க வேண்டும் என்று விரும்புபவள் நான்.. புரியாவிட்டால் அதை படிக்கவே மாட்டேன்! எனக்கு ME Power Electronics படிக்க வேண்டும் என்பது கனவு! அதன் பின்னே ஏதேனும் ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்ற வேண்டும் என்று விருப்பம்! ஆனால் அப்படி நடந்து விட வில்லை 🙂 ஒரு நல்ல தாயா , ஒரு இல்லத்தரசியா கடந்த பத்து வருடங்களை ஓட்டியிருக்கிறேன்.. இப்ப சிறிது எனக்கென்று நேரத்தை ஒதுக்க பழகி இருக்கிறேன். ஸ்கூலில் ஆசிரியை ஆகி விட்டால் என்னால் என் வீட்டையோ , குடும்பத்தினரையோ சரியாக கவனிக்க இயலாது! இது போன்று வலைதளத்தில் பதிந்து விடும் போது என்றைக்கும் யாருக்கேனும் உதவியாய் இருக்கும்! உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அம்மா 🙂
LikeLiked by 1 person
இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்
http://blogintamil.blogspot.in/2015/01/4.html
முடிந்தால் பார்த்து கருத்திடுங்களேன்.
LikeLike
வணக்கம் ஆதிவெங்கட் சார்! என்னையும் என் வலைதளத்தையும் நீங்கள் வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளது கண்டு மனம் மகிழ்ந்தேன்! மிகுந்த உற்சாகம் அளித்திருக்கிறீர்கள் ! எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும் விதத்தில் ஒரு அறிவியல் தளம் ஆரம்பிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.. இதில் இடப்படும் பதிவுகளை படிப்பவர்களுக்கு அவை எந்த வகையிலாவது உதவியாய் இருந்தால் அதுவே போதும் எனக்கு! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !நான் வலைச்சரத்தில் இரண்டு மூன்று முறை கருத்திட முயன்றேன்.. ஆனால் என்னால் முடியவில்லை.. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை!
LikeLike
சந்தேகம் தீர்ந்தது…! நன்றி…
LikeLike
சந்தேகம் தீர்ந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தனபாலன் சார் 🙂
LikeLike